புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுவது ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த கைதுகள் தொடருமாக இருந்தால் அரசு பாரிய சவால்களை சரவதேச ரீதியில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
முதலில் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரது கைதுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிகையில்;
கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாத நிலையிலேயே கைது செய்யப்பட்டது வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வீணடிக்கும் செயற்பாடாகவே தாம் இதனை கருதுவதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படவுள்ள நிலையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமை, காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை ஆகியன இனப் பிரச்சினை தீர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் செயற்படுவதாக அரசு கூறிவருகின்றது. ஆனாலும் வடக்கு கிழக்கில் தமிழர்களது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டு உள்ளன. முன்னாள் போராளிகள் கைதாகிய வண்ணமே உள்ளனர். இவை எல்லாம் நல்லாட்சி அரசின் இலட்சனங்களாக தெரியவில்லை.
எதோ ஒரு உள்நோக்கமுடைய செயற்பாடுகளாக தான் கூட்டமைப்பு இவற்றை பார்க்கின்றது. நாங்கள் இவை தொடர்பில் முதலில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளோம். அதன் பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில், தாம் சர்வதேசத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வலம்புரி நாளிதழ்