இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பால் அழிக்கப்பட்ட சிரியாவின் பல்மைரா நகரின் தோரணவாயிலின் மாதிரி வடிவம் ஒன்று லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அந்த வெற்றிச் சின்னமாக அமைக்கப்பட்ட அலங்கார தோரணவாயிலின் மூன்றில் இரண்டுபங்கு அளவுள்ள இந்த மாதிரி வடிவம் முப்பரிமாண தொழில்நுட்பத்தைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு சென்ற அக்டோபர் மாதம் இதையும், வேறு கோவில்களையும், தொல்பொருள் கட்டிடங்களையும் வெடிவைத்து தகர்த்தது.
3D பிரிண்டர் அதாவது முப்பரிமாண அச்சியந்தரம் மூலம் இந்த பிரதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
முதல்கட்டமாக பல்மைராவின் புகழ்பெற்ற வெற்றி தோரணவாயிலின் முப்பரிமாணக் காட்சிகள் இந்த கணினிக்குள் உள்ளீடு செய்யப்பட்டது.
அடுத்ததாக எகிப்திய பளிங்குக் கல்லில் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்கும் முப்பரிமாண இயந்திரம் இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய அலங்கார வளைவை செதுக்கியது.
ஆக்ஸ்போர்ட், ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களும் துபாயின் எதிர்காலத்துக்கான அருங்காட்சியகமும் இணைந்து இதை உருவாக்கியுள்ளன. இது புரட்சிகரமான தொழில்நுட்பம் என இந்த திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“இதுவரை செய்யப்பட்ட பழங்கால சின்னங்களின் மீளுறுவாக்கத்தில் இதுவே தத்ரூபமானது என்று நினைக்கிறேன். அந்த தோரண வாயிலில் இருந்த சிலந்திவலைகள், பறவைக்கூடுகள், பட்டாம்பூச்சிகளைக்கூட இந்த மீளுறுவாக்கப் பிரதியில் செதுக்குவதா வேண்டாமா என்கிற அளவுக்கு நாங்கள் விவாதித்தோம். இடிக்கப்பட்ட உண்மையான தோரணவாயிலின் இருபரிமாண மற்றும் முப்பரிமாண படங்களின் அடிப்படையில் முப்பரிமாணத் தோற்றத்தை செதுக்கினோம்”, என்றார் டிஜிடல் தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த ரோஜர் மிஷெல்.
அதேசமயம் எல்லோருமே இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை.
சில வரலாற்றாய்வாளர்கள் இதன் பிரிதியாக்கம் சரியாக இல்லை என்றும் இதற்காக நேரமும் பணவிரயமானதாகவும் விமர்சிக்கிறார்கள்.
ஆனால் இதன் ஆதரவாளர்களோ இதை மறுக்கிறார்கள். வேறு எதற்குமே இது பயன்படாவிட்டால்கூட, சிரியாவின் வரலாற்றை அழிக்க முயல்பவர்களை எதிர்ப்பதன் சின்னமாகவாவது இது இருக்கும் என்பது அவர்கள் வாதம்.
பிபிசி