முற்றத்து கல்லொன்றில்
முத்தம்மா அமர்ந்திருக்க
எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி
அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி
கிட்டத்தில் நடந்து சென்று
கீழ் வளைவு வங்கருகே
சட்டென்று வந்து நிற்கும் பஸ்ஸில்
சடுதியாக ஏறுகிறாள் பார்த்து
வெள்ளை நிறச் சட்டையுடன்
இரட்டைப் பின்னல் முதகைத் தொட
கள்ளமில்லா பார்வையுடன் வருவாள்
காணும் போது கண்ணியத்தை தருவாள்
புகை கக்கும் விளக்கொளியில்
பூமியில் அமர்ந்தபடி
தொகையான பாடங்களைப் படிப்பாள்
தூரவுள்ள நம்பிக்கையை நினைப்பாள்
நீர் கொணர்ந்து புல் அறுத்து
நாலு புறம் மனை கூட்டி
பார் பிடித்து தோட்ட வேலை செய்வாள்
பத்திரிகை பலவற்றைப் படிப்பாள்
வெற்றிலையும் போடாமல்
ஊர்வம்பும் பேசாமல்
முற்றிய நோக்கமதை எண்ணி
முழுமூச்சாய் கல்வியதை கற்பாள்
வீட்டுக் கணக்கு செய்து
விஞ்ஞான விடையெழுதி
நாட்டுச் சரித்திரமும் அறிவாள்
நல்ல கிரிகைகளைப் புரிவாள்
சுட்ட நீர் அருந்தி உணவை மூடி வைத்து
சுகாதாரம் அறிந்ததனை செய்வாள்
கெட்ட பழக்கமதை கீழாக தள்ளிவதை;து
கொள்கை குடைபிடித்து நடப்பாள்
எட்டத் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை
ஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்
சுட்டப் பொன்னாக விளங்கி மலைநாட்டில்
சூழ்ந்த கருமைதனை துடைப்பாள்
முத்தம்மா காலத்து மூத்த பழைமகள்
முடிக்க புதுமகள் பிறந்தாள்
சுத்தமாய் பொன்னொளி எங்கும் பரப்பிட
சுந்தரத் தமிழ் மகள் நடந்தாள்
முற்றத்து கல்லொன்றில்
முத்தம்மா அமர்ந்திருக்க
எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி
அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி
எஸ்.இஸ்மாலிகா (புஸல்லாவ)feb 2006