இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன்
உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார்.
இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது.
மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவர முயன்றுகொண்டிருக்கும் வேளையில், நல்லிணக்கம் ஏற்பட சிங்கள சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
தமது தரப்பால் அரசியல் சாசனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனும் கருத்துக்கள் சில சிங்களத் தரப்பிடமிருந்து வருவது குறித்த கவலையையும் அவர் வெளியிட்டார்.
நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடன் இணைந்துவாழவே தாங்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் மாகாண சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறினார்.
இலங்கையில் மாகாண சபைகள் என்ற ஆட்சி முறை இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் நிலை, புதிய அரசியல் சாசனத்தின் மாற்றப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபை கோரியுள்ளது.