உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தனர்.
இடைக்கால தடை விதிக்கப்பட்டடு வரும் 27-ம் தேதிக்கு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அன்று வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகல் ரோஹத்கி, உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப்பெறப்படாது என்றும் ஏப்ரல் 27-க்கு முன்னதாக அங்கு ஆட்சி அமைக்க பாஜக முற்படாது என்றும் உறுதியளித்தார்.
உத்தராகண்ட் சர்ச்சை பின்னணி:
கடந்த 2012 ஜனவரி 30-ல் உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 32 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜகவுக்கு 31 இடம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், இதர கட்சிகளைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் பகுகுணா முதல்வராக பொறுப்பேற்றார்.
உட்கட்சி குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகினார். இதைத் தொடர்ந்து 2014 பிப்ரவரி 1-ம் தேதி ஹரீஷ் ராவத் முதல்வராகப் பதவியேற்றார். அதே ஆண்டு ஜூலையில் நடந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இதன்மூலம் அந்த கட்சியின் பலம் 35 ஆக உயர்ந்தது.
ஆரம்பம் முதலே விஜய் பகுகுணாவுக்கும் ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பகுகுணா உட்பட 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் ஆளுநர் கே.கே. பாலை சந்தித்து ஆட்சியை கலைக்கக் கோரி மனு அளித்தனர். அதன் பேரில் மார்ச் 28-ம் தேதி பெரும் பான்மையை நிரூபிக்குமாறு அரசிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
போர்க்கொடி உயர்த்திய 9 எம்எல்ஏக்களையும் தன் பக்கம் இழுக்க ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக சி.டி. வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியது. இந்தப் பின்னணியில் 9 எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கோவிந்த் சிங் உத்தரவிட்டார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடப் பதற்கு ஒருநாள் முன்பு (மார்ச் 27) மத்திய அமைச்சரவை பரிந்துரையின்பேரில் 356-வது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து:
இதை எதிர்த்து மாநில உயர் நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்ப தாவது:
உச்ச நீதிமன்றம் வகுத்த விதி களுக்கு மாறாக உத்தராகண்டில் 356-வது சட்டப்பிரிவு பயன்படுத்தப் பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தனி அமைப்பு போல செயல் பட்டிருப்பது தெரிகிறது. 356-வது சட்டப்பிரிவு கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
உத்தராகண்ட் ஆட்சி கலைப்பில் மத்திய அரசு கூறிய காரணங்கள் திருப்திகரமாக இல்லை. எனவே தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்கிறோம். வரும் 29-ம் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தகுதிநீக்கம் செய்யப் பட்ட 9 எம்எல்ஏக்களும் சட்டத் துக்கு விரோதமாக குற்றம் இழைத்துள்ளனர். அவர்களின் தகுதி நீக்கம் செல்லும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.