ஆளாளுக்கு கூட்டணி பேரங்களில் பிஸியாக இருந்தபோது, `ஐ’யம் சிங்கிள் அண்ட் ஐ’யம் யங்கு’ என தனிக்காட்டு ராஜாவாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தவர் சீமான். நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமாடுபவரை, கூடவே இருந்து கவனித்த வேலையில்..
அதிகாலையில் தொண்டர் ஒருவர் சுடச் சுட கொண்டுவந்த பருத்திப் பாலுடன் ஆரம்பமானது அன்றைய தினம்.
சீமானுக்குப் பாதுகாப்பு கொடுக்க கறுப்புச் சட்டைப் படை இருக்கிறது. காலையிலேயே அவர்களின் கமாண்டர் அந்த எட்டுப் பேரையும் தீவிரமாகப் பயிற்சி தருவதைப் பார்வையிட சீமான் சென்றார்.
அப்போது அவர்கள் சேராக நின்று இடது கையை தலைக்கு மேல் தூக்கி வணக்கத்தை தெரிவித்தார்கள். நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவரும் இப்படித்தான் முஷ்டியை உயர்த்தி விநோதமாக ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லிக்கொள்கிறார்கள். சீமானும் பதிலுக்கு அவ்வாறே உக்கிரமாக வணக்கம் வைத்தார்.
குளியல் போட்டு வந்தவருக்கு இட்லி, வடை, உப்புமா என காலை உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே அன்றைய தினம் நடக்கும் பிரச்சார இடங்கள், வேட்பாளர்கள், உள்ளூர்ப் பிரச்சினைகள் என அப்டேட் ஆகிறார். சீமான் எப்போதுமே கறுப்புச் சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேன்ட். 10 செட்களுக்கும் மேல் கறுப்புச் சட்டை- ஜீன்ஸ் பேன்ட் வைத்திருக்கிறார்.
சீமானைப் போலவே உடை அணிந்த ஒரு செட் ஆட்கள், கறுப்பு கூலிங்கிளாஸ், வாக்கி டாக்கி என வந்து நின்றனர்.
சீமான் வண்டியில் ஏறுவதற்கு முன்னர் நிர்வாகி ஒருவர் கைக்குழந்தையுடன் ஓடிவந்து, பேர் வைக்கும்படி கேட்டார். குழந்தையைக் கைகளில் வாங்கிக் கொஞ்சி, ஆணா? பெண்ணா? என விசாரித்துவிட்டு சற்று நேரம் யோசித்து, ‘பேரரசி… பேரரசி… பேரரசி…’ என மூன்று முறை சொல்லி, `பேரரசி’னு வைங்க’ எனக் குழந்தையின் கையில் 500 ரூபாயைக் கொடுத்தார்.
முதல் பிரசாரக் கூட்டம், குடியாத்தம். சீமான் தனது காருக்கு வருவதற்கு முன்னரே பாதுகாப்புப் படையினர் அவர் காரின் நான்கு புறங்களிலும் சுற்றி நிற்கின்றனர். சீமான் காரில் ஏறியதும், விறுவிறுவென அவர்கள் வேனில் ஓடிப்போய் ஏறுகின்றனர். சீமான் காருக்கு முன் `ரூட் க்ளியர்’ செய்ய ஒரு பைலட் வண்டி, அவருக்குப் பின் கறுப்புப் பூனைப் படையினர் வாகனம் என கெத்துகாட்டுகிறார்கள்.
10 மணி குடியாத்தம் பொதுக்கூட்டத்துக்கு, வேலூரில் இருந்து சரியாக 9:15 மணிக்கு புறப்பட்டார். ‘நாம் தமிழர் அரசியல் செயல்பாட்டு வரைவு’ புத்தகத்தைப் புரட்டி பாயின்ட்ஸ் எடுத்துக்கொண்டார். முன்னே சென்ற பாதுகாப்பு வண்டிக்காரர்கள் எதிரே வரும் வாகனங்களைத் தள்ளிப்போகச் சொல்லி, கையாட்டிக்கொண்டே வந்தார்கள். இதைக் கவனித்த சீமான், `என்னை, கூட்டம் சூழ்ந்துக்காமப் பார்த்துக்கிட்டா போதும். ரோட்ல போற வண்டிகளுக்கு ஏன் தொந்தரவு தர்றாங்க? அப்படிலாம் பண்ணக் கூடாதுனு தம்பிகள்ட்ட சொல்லுங்க…’ எனக் கோபமாக உத்தரவிடுகிறார். சீமானுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கறுப்புப் பூனை கமாண்டர் வாக்கி டாக்கியில் உடனே விஷயத்தைச் சொல்ல, சீமான் முகத்தில் பெருமிதப் பூரிப்பு.
குடியாத்தத்தில் சீமான் வண்டி நிற்பதற்குள் கறுப்புப் பூனைகள் பாய்ந்து வந்து, கதவை ஒட்டி நாலாபுறங்களும் நின்றுகொள்கிறார்கள். கறுப்புப் பூனைகளின் பரபரப்பைப் பார்த்து, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் ‘வந்திருக்கிறது யாராயிருக்கும்?’ எனக் காத்திருந்து குறுகுறுப்பாகப் பார்க்கிறார்கள். பேண்டு வாத்திய வாசிப்போடு வரவேற்றார்கள் குடியாத்தம் தம்பிகள்.
கூட்டம் தொடங்கும் முன்னர் `அக வணக்கம்’ எனச் சொன்னவர்கள் ஒரு நிமிடம் அமைதி காத்தார்கள். இது ஈழத்துக்காக உயிர் நீத்தவர்களுக்கு மெளன அஞ்சலி. அடுத்து தமிழுக்காக, தமிழர்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம், ‘நாம் தமிழர் நாமே தமிழர்’ என்னும் உறுதிமொழி எடுக்கிறார்கள்.
மேடைக்கு மேலே கூலிங்கிளாஸ் அணிந்த இரண்டு கறுப்புப் பூனைப் படையினர் சீமானுக்குப் பின்னால் அரண்போல நின்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த சில நூறு பேர்களை, வலது பக்கமும் இடது பக்கமும் மாறி மாறி ஒன்றரை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
உச்சிவெயிலில் குடியாத்தம் பகுதியில் சீமான் மைக் பிடிப்பதற்கு முன்னர் `பன்னிரண்டு கோடி மக்களின் ஒரே நம்பிக்கை, அண்ணன் சீமான் அவர்கள் அடுத்து பேசுவார்’ என அறிமுகம் கொடுக்க. 12 கோடிப்பே… 12 கோடிஈஈஈ…’ என யாரோ கலாய்க்கிறார்கள். `சீமான் கணீர்னு பேசுவார்ப்பா’ என ஒரு ஆட்டோக்காரர் அவர் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். `இரண்டு ஆண்ட கட்சிகளும் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொள்கிறார்கள். இரண்டு பேர் சொல்வதுமே உண்மை. தங்களை `மாற்று’ என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள். ஒருவர் ஆண் ஒருவர் பெண். இங்கே வேட்டி… அங்கே சேலை, இங்கே அடிக்கடி பாராட்டு விழா… அங்கே அடிக்கடி பதவியேற்பு விழா. இதுதான் அங்கே மாற்று. தாலிக்குத் தங்கம் கொடுத்தீர்கள்… இரண்டு கோடிப் பேரைக் குடிக்கவைத்து இரண்டு பேரும் தாலியறுத்தீர்கள்’ என உக்கிரமாகப் பேசி இரட்டை மெழுகுவத்திக்கு வாக்கு சேகரித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் வெயிலில் அமர்ந்து இருந்ததால் தொப்பலாக வியர்வையில் நனைந்துபோனார்கள் மக்கள்.
கூட்ட மேடை அமைப்பு எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருந்தது. சிவப்பு தரை விரிப்பு, சிவப்பு கலர் பேனர். அதில் பிரபாகரன் படம், கர்ஜிக்கும் புலி, கைகட்டி நிற்கும் சீமான்… என அமைத்திருக்கிறார்கள். முன்னர் எல்லாம் பேனர்களில் முஷ்டி முறுக்கி, கை உயர்த்தி கோபமாக நின்றவர், இப்போது ஏனோ கைகட்டி சாந்தமாகியிருக்கிறார்.
கூட்டம் முடிந்து, மீண்டும் காரில் வந்து அமர்ந்தவர் நீரிழப்பைச் சரிகட்ட எலெக்ட்ரால் கலந்துதரச் சொல்லிப் பருகிவிட்டு, நம்மிடம் திரும்பி, “நம்ம மேடை அமைப்பு இப்படித்தான் இருக்கும். மேடைக்கு மட்டும் பந்தல், ஏர் கூலர்னு வெச்சுக்கிறது இல்லை. மக்கள் வெயில்ல நின்னு கேட்கும்போது நமக்கு என்ன நிழல் வேண்டியிருக்கு?’’ என்று அக்கறையாகப் பேசுகிறார். கார், அடுத்த பிரசார பாயின்ட்டான ஆம்பூருக்குப் புறப்பட்டது.
காரில் ஒரு சின்ன டப்பாவில் பனங்கற்கண்டு மற்றும் மிளகுக் கலவையை எடுத்து ஒரு ஸ்பூன் வாயில் போட்டுச் சுவைத்தவர், “தொண்டைக் கட்டு, குரல் கரகரப்பை பனங்கற்கண்டு மிளகு சரிபண்ணிடும். நிறையப் பேர் பேசின மைக்ல பேசறோம்ல… தொண்டைக்கு எதுவும் தொற்று வந்திடக் கூடாதுனு கயல் தயார் பண்ணிக் கொடுத்தது” என்ற சீமான் முகத்தில் சிரிப்பு. காரில் செல்லும்போது அவர் மனைவிக்கு நடுநடுவே போன் செய்து அக்கறையாக விசாரிக்கிறார். அரசியல் அப்டேட்டுகள், வீட்டு நிகழ்வுகள், பிரசார சுவாரஸ்யங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். “இந்த ஒரு மாசம் வீட்டுக்குப் போக நேரம் இருக்காது” என்றவர், “அடுத்த மாதம் கடலூர் தொகுதி பரப்புரைக்கு அவங்களையும் கூட்டிட்டுப் போவேன்” என்றார்.
காரில் வரும்போது பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை. “தம்பிங்க அனுப்பும் வாட்ஸ்அப் வீடியோ, இல்லைனா தம்பிங்க யார்கிட்டயாவது பேசிட்டே வருவேன்’’ என்றார்.
ஆம்பூரில் சீமான் மேடை ஏறும்போது சரியாக மதியம் 12 மணி. சூரியன் சுட்டெரித்த உச்சிவெயிலில் போட்டிருந்த சேர்களும் உருகிவிடும்போல இருந்தது. சிலர் மட்டும் கடையோரம் நிழலில் ஒதுங்கிப் பேசுவதைக் கேட்டனர்.
ஆட்டம் இல்லை என்றாலும் மேடையைச் சுற்றி, நான்கு மூலைகளிலும் நான்கு கறுப்புப் பூனைகள், சீமான் பின்னால் இரண்டு பேர் எனக் கச்சிதமாக தங்கள் வேலையை செய்கிறார்கள். “இங்கே கடைகளில் இருக்கும் பெயர்ப்பலகையைப் பாருங்க. எல்லாமே ஆங்கிலம்… எங்கேயுமே தமிழ் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழுக்குத்தான் முன்னுரிமை. இளநீரை தேசிய பானம் ஆக்குவோம்” என்றவர் அரை மணி நேரம் உலக வரலாறு, சங்க இலக்கியத்தில் இருந்து எல்லாம் உதாரணம் எடுத்துப் பேசினார். பெரிதாகக் கூட்டம் இல்லை என்றாலும் ஹை டெசிபலில் தெறிக்கவிடுகிறார்.
ஆம்பூர் கூட்டம் முடித்து 1 மணிக்கு வாணியம்பாடி புறப்பட்டது வண்டி. வாணியம்பாடி கூட்டத்துக்கு 30 சேர் மட்டுமே போடப்பட்டிருந்தன. ‘`வெயில் அதிகம்… அதான் கூட்டம் இல்லை. அதுவும் இல்லாம நமக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கு.
மக்கள் அதிகம் இல்லாத இடத்தில்தான் கூட்டம் நடத்தவே அனுமதி தர்றாங்க. நம்ம மேல உள்ள பயம்தான்’’ என்று சமாளிப்பு ஸ்டேட்டஸ் தட்டியவர், கூட்டத்தை 4 மணிக்கு மாற்றிவிட்டு ஹோட்டலுக்கு யுடர்ன் அடித்தார்.
மதியம், மணக்க மணக்க ஆம்பூர் மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழிக் குழம்பை கட்சியினர் வீட்டிலேயே தயார்செய்து ஸ்பெஷலாக சீமானுக்காக எடுத்துவந்திருந்தனர். ‘`தனியாகச் சாப்பிடப் பிடிக்காது. எல்லோருடனும் சேர்ந்து தான் சாப்பிடுவேன்’’ என்று அனைவரோடும் தரையில் உட்கார்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தார். ‘`நாட்டுக்கோழிக் குழம்பு அருமைடா. ராத்திரிக்கு மறக்காம எடுத்துவைங்க’’ என்றவர், `நாம் தமிழர் தேர்தல் அறிக்கை’யை ஒரு புரட்டுப் புரட்டிவிட்டு, தம்பிகளுடன் பேசிவிட்டு அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டார்.
இந்த இடைவெளியில், `நாம் தமிழர் ஊடகப் பிரிவு, எல்லா கூட்டங்களையும் வீடியோவாக, புகைப்படங்களாகப் பதிவுசெய்து யுடியூப், ஃபேஸ்புக், கட்சி வலைதளங்களில் சீமானின் அனல் பேச்சுக்களை அப்டேட் செய்கிறது.
சீமானோடு கறுப்புப் பூனைகள் வலம்வரும் படங்களை வலைதளத்தில் செம ஓட்டு ஓட்டுவதைப் பற்றியும் அவர்களே சிரித்துப் பேசிக்கொள்கிறார்கள்.
காலையில் தள்ளிவைத்த கூட்டத்துக்கு 4 மணிக்குப் புறப்பட்டார் சீமான். `பாட்ஷா’ பட ரஜினியை அழைத்துச் செல்வதுபோல், ஆள் இல்லாத இடத்திலும் அரண் அமைத்துச் சென்று அவரை காரில் ஏற்றி, கடமையில் கண்ணாக இருக்கிறார்கள் பிளாக் கேட்ஸ். கூட்டத்தில் `அன்பிற்குரிய சொந்தங்களே’, `என் பிள்ளைகளே’, `நாம்தான் மாற்று’, `என் இனம்’, `நம் கட்டமைப்பு’ இவை எல்லாம் சீமான் அதிகம் உதிர்க்கும் வார்த்தைகள்.
கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் கல்லூரி மாணவர்கள் சிலர், ` `தமிழ்… தமிழ்’னு சொல்றார். ஆனால், இவர் தமிழ் உடையான வேட்டி-சட்டை போடாமல் ஜீன்ஸ் பேன்ட்-சட்டை போட்டிருக்கிறார்?’ எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
அனைத்துக் கூட்டங்களிலும் ஒருவர் சீமான் படம்போட்ட சட்டையுடன் கையில் உண்டியல் ஏந்தி மக்களிடம் செல்கிறார். அவர்கள் தரும் பணத்தை வாங்குகிறார். “ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை இந்த உண்டியலில் பணம் சேர்கிறது. அது கட்சி தேர்தல் நிதிக்காகச் செலவுசெய்யப்படும்’’ என்றார்.
கறுப்புப் பூனைப் படையினரில் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம். “இந்த வேலை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சம்பளம் கிடையாது, அண்ணன் மேல உள்ள அன்புக்காக இதைச் செய்றோம். ஏதாவது செலவுக்கு வேணும்னா, அண்ணனே எவ்ளோ வேணுமோ அவ்வளவும் கொடுத்துடுவார். அண்ணன் ரொம்ப நல்லவர்’’ என்றார். அவருடன் இருந்த கறுப்புப் பூனைப் படையினரும் `ஆமாம்… ஆமாம்’ என்பதுபோல தலையாட்டினர்.
அடுத்து வாணியம்பாடி கூட்டம் முடித்து மாலை திருப்பத்தூர் கூட்டம். திருப்பத்தூர் செல்லும் வழியில் இளநீர்க் கடையை பார்த்துவிட்டு ‘`இதை நம் தமிழ்த் தேசிய குடிபானமா மாத்தப்போறோம்’’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை நிறுத்தச் சொன்னார்.
காரில் இருந்து இறங்கி, நேராக இளநீர் விற்கும் பெரியவரிடம் ‘`ஐயா பெரியவரே, எல்லாருக்கும் ஆளுக்கு ஒண்ணா தேசிய பானத்தை வெட்டிக் குடுங்க’’ என்றதும், கடைக்காரர் மிரண்டுபோகிறார். `இளநீர்’ எனச் சுட்டிக்காட்டிய பிறகுதான், கடைக்காரருக்குப் பதற்றம் நீங்கியது.
திருப்பத்தூர் கூட்டத்தில், சீமான் உரைக்கு முன்னர் சில வாண்டுகள் கராத்தே செய்து அப்ளாஸ் வாங்கினார்கள்.
பர்கூர் தொகுதியில் கூட்டம். கிருஷ்ணகிரியிலும் வேலூர் மாவட்டத்தைவிட சற்றே கூட்டம் அதிகம். இங்குதான் கறுப்புப் பூனைப் படையினரின் பாதுகாப்பு பயன்பட்டது. சீமான் பக்கத்தில் கூட்டம் வராமல் பார்த்துக் கொண்டனர். `இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்’ என டைம் பார்த்துக்கொண்டே பேசி முடித்தார் சீமான்.
காலையில் இருந்து கழுத்து நரம்பு புடைக்கப் பேசியதில் தொண்டை கட்டிக்கொண்டது. உடனே அதற்காக மாத்திரை எடுத்துக்கொண்டார். அவரைச் சாப்பிடவிடாமல் நிர்வாகத் தம்பிகள் சிலர் இரவு 11 மணிக்கு `234 தொகுதிகளிலும் வெல்வது எப்படி?’ என்ற உத்தி பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.
அவர்களை சீமான் உதவியாளர்கள் ஒருவழியாக அனுப்பிவிட்டு, அண்ணனுக்கு மீண்டும் பிரியாணியையும் கோழிக்குழம்பையும் தந்தார்கள். உணவு முடித்து உறங்கச் சென்றார் சீமான்!
விகடன்