இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை – ஜெயா

jஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

அதன்படி திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா பேசியதாவது:-

இலங்கை பிரச்சினையில் தி.மு.க. நாடகம் ஆடியது. இலங்கைத் தமிழர்களை தி.மு.க. ஏமாற்றியது. தமிழர் படுகொலைகளை தடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு மத்திய அரசு இராணுவ உதவி வழங்கியதை தி.மு.க. தடுக்கவில்லை. எனது ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படுகின்றன. அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எனது அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம். மேலும், இலங்கையில் நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகே இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். பூரண மதுவிலக்கில் தி.மு.க.வுக்கு உடன்பாடில்லை. தனியார் மூலம் மது விற்பனையை தொடர தி.மு.க. திட்டமிட்டுள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

Copyright © 9221 Mukadu · All rights reserved · designed by Speed IT net