ஒரு மழையை வேண்டி நிற்கின்றேன்
உன்னை விடவும் .. உன்னை விடவும் -இது
கோடையெனும் கடும் சொல்
இலையுதிரும் மரங்களின் நிழலில்
உடல் வருடும் வெப்பத்தின் கனப்பில்
வறண்ட புற்றரைவிரிப்பில்
அதி நேரமாய் இடைவெளி தனிக்கிறோம்
அகலப்போடப்பட்ட படுக்கைகளில்
மழை நோகும் தாகம் உனக்கு
எனக்கும் கடுந்தாகம்
நீர் பற்றிக் கைகள் விரிக்கிறோம்
கைகள் பிரிகிறோம்
நீரற்றுக் கிடக்கும் விளைச்சல் நிலம் நீ
ஏக்கம் தாங்கும் அந்தர வேர் நான்
உன்னை விடவும்
ஒரு மழையை வேண்டி நிற்கிறேன்
தெய்வாதீனமாய் ஓர் நாள் மழைபொழியும்
குளிர் நிறையும்
வரண்ட உப்பாடையெனத் தேகம் மூடும்
கோடையுருகி உடல் களையும்
அன்பின் உயிர் விளைவாய் நீ
மழை கொண்டு வருவாயின்
வா
தாகம் தனித்தலைகிறேன் – உன்னை விடவும்
தேவையொரு மழையெனக்கு
ஆதி.பா