மேதினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி மலையக மக்கள் மற்றும் தென் இலங்கை மக்களுடைய இருப்பு அடையாளம் அரசியல் தீர்வு என்ற தொனிப் பொருளுக்கு அமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணியும் கூட்டமும் தலவாகலையில் இன்று கோலாகலமாக இடம்பெற்றது.
இதன்போது தலவாகலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கொத்மலை வீதி வழியாக சென்ற பேரணி தலவாகலை நகரசபை மைதானத்தை வந்தடைந்தது.
இந் நிகழ்விற்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், கூட்டணியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எம்.திலகராஜ், பதுளை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் அரவிந்தகுமார் மற்றும் மத்திய மாகாணசபை உருப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, சிங்பொன்னையா, எம்.உதயகுமார், ஆர்.ராஜாராம் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது.
நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு ஊறணிச் சந்தியில் இருந்து மாபெரும் முச்சக்கர வண்டிகளின் பேரணி இடம்பெற்றதோடு, இந்த பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்காவினை அடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
முச்சக்கர வண்டி சாரதிகளின் நலன்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மேதின நிகழ்வு நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இலங்கை ஆசிரியர் சங்கமும் பல்கலைகழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழிலாளர்கள் தினம் யாழ் பல்கலைகழகத்தின் முன் ஆரம்பமாகியது.
இந்த பேரணியானது குமாரசாமி வீதியூடாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன் வீதியூடாக சென்று மீண்டும் பல்கலைக்கழக பிரதான வளாகத்திற்கு சென்று அங்கு விஷேட மேதின கூட்டம் இடம்பெற்றது.
அத தெரண