பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மலை நகரமான லாந்தபான் நகரின் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய துணை மேயர், மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அர்மாண்டோ செபலாஸ் போட்டியிடுகிறார். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், செபலாஸ் இன்று அதிகாலை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், செபலாசை சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.
தேர்தல் விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பதாக கருதி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தலைமை சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையும் சேர்த்து இந்த ஆண்டு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் வன்முறை நடப்பதும், இதில் பலர் கொல்லப்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்கிறது. அதிலும் மிக மோசமான நிகழ்வாக, 2009ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலின்போது நடந்த தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் செய்தியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.