லண்டன் நகர மேயராக சாதிக் கான் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா, இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த 2ம் தலைமுறை நபருக்கு இந்தியாவிலுள்ள எந்த நகரிலாவது இதுபோன்ற முக்கிய பதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா? என ஆச்சரியமுடன் கேட்டுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான உமர் அப்துல்லா தொடர்ந்து டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கான் வெற்றி பெற்றதற்கு லண்டனுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு வாக்களிக்க கோரி மக்களை பயமுறுத்த வேண்டிய தேவை இல்லை என்பதை கானின் வெற்றி காட்டுகிறது. அனைத்து நகரங்களுக்கும் இது ஓர் எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
எனினும் இவரது கருத்துக்கு அதிரடியாக பல பதில் கருத்துகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றில், ஜனநாயக நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் அன்பர் ஆட்சி செய்யலாம். ஆனால் முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில் எந்தவொரு சிறுபான்மையினரும் ஆட்சி செய்ய முடியாது என ஒரு கருத்து பதிவு ஆகியுள்ளது.
இதுபோன்று மற்றொரு பதிவில், குடிபெயர்வோரை மறந்து விடுங்கள். தனது சொந்த நாட்டிக்கு திரும்பும் அகதியான காஷ்மீர் பண்டிட்டிற்கு இதுபோன்ற பதவி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு நபர்.
டுவிட்டரில் மற்றொரு பதில் பதிவில், சார்ஜி, இந்த நாடு முழுவதையும் 10 வருடங்களாக ஆள்வதற்கு முதல் தலைமுறையை சேர்ந்த சிறுபான்மை சமூக நபரை நாம் தேர்வு செய்துள்ளோம். நான் டாக்டர் மன்மோகன் சிங்கை கூறினேன் என கூறப்பட்டுள்ளது
.