பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது

article_1462772713-Arasst02
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்களைக் கைது செய்யப் பொலிஸார் சென்றவேளை, அவர்களில் ஒருவர் பொலிஸார் மீது வாள்வெட்டை மேற்கொள்ள முயன்றுள்ளார்.

இவர்களிடமிருந்து கோடாரி, கைக்கோடாரி, மூன்று வாள்கள், இரும்பு பட்டம், மூன்று இரும்பு பொல்லுகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தட்டாதெருப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் தொடர்புபட்டிருந்த நிலையில், சிவில் பொலிஸாரினால் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டால் அவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படவில்லை.

எனினும், குறித்த இரண்டு பேரும், மேலும் இரண்டு பேருடன் இணைந்து நாளுக்கு நாள் அதிகமான குற்றச் செயல்களைச் செய்து வந்தமையால், நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் பாரதூரமான 9 குற்றச்செயல்களுடன் நேரடித் தொடர்பு உள்ளமை அவர்களின் வாக்குமூலத்தின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

தாங்கள் இரு குழுக்களாகச் செயற்பட்டு இவ்வாறு கொள்ளையடித்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளனர். கொள்ளையடித்த பொருட்களில் பலவற்றை இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
செல்வநாயகம் கபிலன்

Copyright © 0348 Mukadu · All rights reserved · designed by Speed IT net