சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே அ.தி.மு.க., இது குறித்து புகார் அளித்திருந்தது.
திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதையடுத்து பேஸ்புக் பதிவு குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று லக்கானி தெரிவித்துள்ளார். மேலும் வரும் 17ம் தேதி வரை கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் குறித்து எந்த பதிவும் வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.