புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு மே மாதம் 13ம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதன் போது கடந்த ஒரு வருட காலமாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை சமர்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புங்குடுதீவு மாணவி கொலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இரண்டு தவணையில் நடைபெற்று வருகின்றது. முன்னதாக கைது செய்யப்பட்ட பத்து பேருக்கும் ஒரு திகதியில் வழக்கு விசாரணையும் அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை வேறு ஒரு திகதியிலும், நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கடந்த 4ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ‘மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாக காரணம் தமக்கு உரிய பணம் செலுத்தப்படாமையே, பணம் செலுத்தப்பட்டதும் அடுத்த தவணையில் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க முடியும்’ என ஜின்டேக் நிறுவனம் நீதிமன்றுக்கு அறிவித்து இருந்தது.
இந்நிலையிலையே இன்றையதினம் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது மரபணு பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிஸ் குமார் தப்பியது எவ்வாறு இன்று தெரிய வரலாம்.
இதேவேளை பத்து சந்தேக நபர்களின் வழக்கு கடந்த 9ம் திகதி நடைபெற்றது. அந்த வழக்கு விசாரணையில் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.
அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
சட்டத்தரணிகள் முன்னிலை ஆகலாம்.
அத்துடன் சந்தேக நபர்கள் சார்பில் யாழில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலை ஆவதில்லை என சட்டத்தரணிகள் தீர்மானித்து இருந்தனர்.
சட்டத்தரணிகளின் இந்த தீர்மானத்தால் நீதி நியாயத்தை நிலை நாட்டுவது கடினம் எனவும் இதனால் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆவது தொடர்பில் சட்டத்தரணிகள் தமது முடிவினை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஆகியோர் சட்டத்தரணிகளிடம் கோரி இருந்தனர்.
எனவே இன்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரேயினும் முன்னிலை ஆக கூடிய சாத்தியங்கள் உண்டு.
குளோபல் தமிழ்