தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.
வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.
வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.
**************************************************
பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின்
8 ஆம் ஆண்டு நினைவலைகள்
*************************************************
தலைவனின் தலை பிள்ளையாம்
தமிழீழத்தின் அர்சுணனாம்
மலைபோன்ற வெற்றிகளை
குவித்த சமர்க்கள நாயகனாம்
உன் வீரம் கண்டு எதிரி தலை
தெறித்தோடினன் தலைவனும்
அக மகிழ்ந்தனன் !
தாயகத் தென்றலில் உன் உயிரும் கலந்தது
தலைவனின் உயிரிலும் உன் உயிர் இணைந்தது
புலம்பெயர் மண்ணையே நம்பி தேடியே வந்து மருத்துவம் தோற்று போய் விட போர்களத்தில் உன்னை வீழ்த்த முடியாது என்றறிந்த இறைவன் புரியாத நோய் ஒன்றை உன்னுள் புகுத்தி தன் வீரியத்தை காட்டியது அந்த கண்கெட்ட கடவுள் !
நீ கண் மூடியதை அறிந்த பகை கண்
திறந்து பார்த்தனவாம் உன் திருமுகத்தை ஏனெனில்
உன் குரலை சமர்களங்களில் கேட்ட பகை கதிகலங்கி போய் இருந்தனவாம் நீ உயிருடன் இருக்கும் வரையிலும் உன் திருமுகத்தை பார்க்கும் துணிவு பகைக்கு வரவே இல்லையாம் !
களமுனைகள் ஒன்றா இரண்டா?
வெற்றி கொடிகள் ,வீர தடங்கள் ,ஆட்டிகள்,கனரகங்கள்
பெட்டி வியூகங்கள் ,என்று உன் சாதனைகளை சொல்லி விட என்னால் முடியாது அண்ணா.
ஆனால் உன் வீரத்தை பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டதால் எழுத துடிக்கிறேன் எனினும் என் கண்களால் வழிந்தோடும் ரத்த கண்ணீரை ஒத்தி துடைத்து விட என் இரு சிறு கைகள் போதாது !
உன் சந்தன பேளை வைத்து வணங்கிய இடத்தில் நாளை வந்து உனக்கு பூத்தூவி அக வணக்கம் செலுத்த வக்கத்து போய் விட்டோம் அதை நீ அறிவாயோ??
இன்று வென்று விட்டோம் என பகை ஈழத்தில் கெந்தி விளையாடுது நாமோ சிறகுடைந்த சிட்டுகளாய் எங்கெங்கெல்லாமோ மூலை முடக்குகளில் முகவரி இல்லாமல் வெறுமை நிறைந்த வாழ்வினூடே..
கொன்றழித்தான் எம்மை புத்தனின் பக்தன் கதறினோம் எம்மை தேற்ற அந்நாளில் நீ கூட இல்லையே என்று லீமா என்ற உன் மிடுக்கான வீரியம் நிறைந்த குரல் ஓசை பகைவனின் செவிகளுக்கு சென்று சிங்களத்தை சீர்குலைக்க வைக்காத என ஏங்கி துடித்தோம்
brigade
எல்லாம் முடித்தது சிங்களம் !
ஊற்றடைத்து கொண்டது எம் தேசம் !
ஒவ்வொரு கள முனை தாக்குதலின்
வெற்றிகளின் போதும் உன் கருத்துப்
பகிர்வுகளில் ஒரு உண்மை தெறிக்கும்
அதே உண்மை நிஐமாகாதா அண்ணா?
எம் நினைவுகள் ஒடுக்கியே
கரங்கள் கூப்பியே
ஒரு கணம் உங்கள் நினைவுகள்
சுமந்து கண்ணீர் பூக்களை
காணிக்கை ஆக்குகின்றோம்
வீர வணக்கம் அண்ணா
கவிதை ஆக்கம்: மார்ஷல் வன்னி