செக். குடியரசின் ஒஸ்ட்ராவாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுநர் போட்டியில் ஆறு தடவைகள் ஒலிம்பிக் சம்பியனான யூசெய்ன் போல்ட் 100 மீற்றரை 9.98 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றார்.
தொடை தசையில் ஏற்பட்ட உபாதைக்கு ஜேர்மனியில் சிகிச்சை பெற்ற பின்னர் பங்குபற்றிய போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றார்.
இவ் வருடம் அவர் பதிவு செய்த அதி சிறந்த நேரப் பெறுதி இதுவாகும்.
ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற கேமன் அழைப்பு மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 29 வயதான போல்ட் 10.05 செக்கன்களில் ஓடி வெற்றிபெற்றிருந்தார்.
அந்தப் போட்டியின் போதே அவருக்கு தொடைத் தசையில் உபாதை ஏற்பட்டு ஜேர்மனியின் மியூனிச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது பயிற்றுநர் க்ளென் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
ரியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான உலக சாதனையை முறியடிப்பதே தனது இலக்கு என யூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார்.