பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் இன்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விழிப்புலனற்றோரால் முடியாதது என ஒன்றும் இல்லை. விழிப்புலனற்றோர் கல்வியில் சிறந்து விளங்கி வருகின்றார்கள், அனைத்து துறைகளிலும் மிளிர்கின்றார்கள், கடந்த காலத்தில் பல சவால்களை கடந்து வந்தாலும், விழிப்புலனற்றவர்கள் பல்வேறு இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டி இருக்கின்றது.
பார்வையற்ற முதியவர்களை பராமரிப்பதற்கான தகுந்த இடம் இல்லை. கடந்த 2013ம் ஆண்டு முதல் பார்வையற்ற முதியவர்களுக்கான பராமரிப்பு இடத்தினை தேடி வருகின்றோம். ஆனால், அந்த இடத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
இலங்கையில் பல இடங்களில் வழிப்புலனற்றவர்கள் பிச்சை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலும் வெள்ளைப்பிரம்பு ஏந்திய ஒருவர் பிச்சை எடுப்பதை பார்க்க மாட்டீர்கள்.
யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் இந்த நிலமையினை இல்லாது ஒழித்துள்ளது. வடமாகாணத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. யாராவது பிச்சை எடுப்பதைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.
விழிப்புலனற்றோர் மற்றவர்களிடம் கைஏந்தி வாழ்பவர்கள் அல்ல. கைகோர்த்து வாழ்பவர்கள். எமக்காக அழ வேண்டாம். எமக்காக அனுதாபப்பட வேண்டாம் எம்மை மதித்தால் போதும் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.