புதிய கட்சியை ஆரம்பிப்பாராம் விக்னேஸ்வரன் !

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

wigneswaran_CI
இது தொடர்பில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கொழும்பிலுள்ள மத்திய அரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்பாட்டை பேணுவது என்ற தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானவை. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அரசியல் வேண்டுகோள்களுக்கும் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றார். நிர்வாகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்களை அவர் முற்றாகப் புறக்கணித்து வருகின்றார். இதன் காரணமாக மத்திய அரசால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட 75 வீத நிதி திரும்பிவந்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் சமநிலையான யதார்த்தபூர்வமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என விரும்புகின்றது. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பல மோதல்களுக்குப் பின்னர் விக்னேஸ்வரன் தற்போது வடக்கு மாகாண ஆளுநருடன் மோதத் தொடங்கியுள்ளார். கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிப்படையாக ஆளுநருடன் விக்னேஸ்வரன் மோதுகின்றார். வடக்கு மாகண ஆளுநர் சிங்கள தமிழர்கள் மத்தியிலான திருமணங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும் எனத் தெரிவித்தவேளை, விக்னேஸ்வரன் அதற்கு முன்னர் அரசியல் அதிகாரங்கள் அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தார். மிகச் சமீபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களை விக்னேஸ்வரன் பகிரங்கமாகக் கண்டித்திருந்தார்.

ஆளுநர் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக மறுத்துள்ளதுடன் அந்த செய்தியாளர் மாநாட்டின் ஒலிப்பதிவை அனுப்பி வைத்துள்ளார். மேலும், சில நாடகளுக்கு முன்னர் யாழ்ப்பாண அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாகப் புறக்கணித்திருந்தார். தன்னுடன் ஆலோசிக்காமல் அவ்வாறான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார். மேலும், அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தார். தன்னுடன் ஆலோசிக்காமல் அவர்கள் கலந்துகொண்டதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எனினும், அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வடக்கு மாகண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்பின்னர் தான் இவ்வாறான கூட்டங்களை எதிர்காலத்தில் கூட்டப்போவதில்லை என ஆளுநர் அறிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் அதிகரித்து வரும் பிளவுகளை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவரையும் பேச்சுகளில் ஈடுபடசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், இந்த முயற்சி வெற்றியடையவில்லை. இருவரும் இவ்வாறான சந்திப்பொன்று குறித்து தயக்கத்தை வெளியிட்டுள்ளனர். அரசியல் வட்டாரங்களில் கருத்து வேறுபாடுகள் மேலும் தீவிரமடையலாம். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பிளவை இது மேலும் அதிகரிக்கலாம். இதேபோன்று சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முறுகலும் தீவிரமடையலாம். இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் பிரிந்து சென்று தனது தனிக்கட்சியை ஆரம்பிப்பார். தனது கடும்போக்கு கொள்கைள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லலாம் என்ற நம்பிக்கையில் அவர் இதனை செய்வார் என எதிர்வுகூறப்படுகின்றது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி இணையம்

Copyright © 1866 Mukadu · All rights reserved · designed by Speed IT net