புதுச்சேரி: பதவியேற்பு விழாவின் போது தனது காலில் விழுந்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் காலில் பதிலுக்கு கிரண்பேடியும் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றவர் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் கிரண்பேடி. இவர் டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கி, தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் புதுச்சேரியின் துணைநிலை கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது கிரண்பேடியை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கிரண்பேடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அருகில் புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியும் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது கிரண்பேடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற சில எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்தனர். அவர்களை கிரண்பேடி தடுத்து மக்கள் பிரதிநிதிகள் யாருடைய காலிலும் விழக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
ஆனால், கிரண்பேடிக்கு சால்வை அணிவித்த காங்கிரஸ் எம்.எல்ஏ. விஜயவேணி, யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென அவரது காலில் விழுந்து வணங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கிரண்பேடி, உடனடியாக சுதாரித்துக் கொண்டு, ‘இந்த மாதிரி காலில் விழக்கூடாது’ என அறிவுரை கூறினார். பின்னர் பதிலடியாக திடீரென அந்த பெண் எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்தார் கிரண்பேடி.
இதனை சற்றும் எதிர்பாராத விஜயவேணி சங்கடத்தில் நெளிந்தார். அதோடு காலில் விழுந்த கவர்னர் கிரண்பேடியை உடனடியாக அவர் தூக்கினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடடா இப்படி ஒரு காட்சியை தமிழகத்தில் காண முடியுமா…?!
நன்றி தற்ஸ் தமிழ்.