தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நல்லறவு இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புலிருந்து விலகி, புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போலத் தோன்றுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
புதிதாக உருவாகும் கட்சி கடும் போக்கு கொள்கையை பின்பற்றும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதால், கூட்டமைப்பு இதற்கு அனுமதியளிக்கும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இது ஒரு முட்டாள்தனமானது என தெரிவித்துள்ள முதலமைச்சர், சம்பந்தனை தாம் ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தித்தாகவும், தங்களுக்கிடையில் உறவு சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.