17 ஆண்டு கால கட்டுமானப் பணி நிறைவடைந்து இன்று உலகின் நீளமான மற்றும் ஆழமான ரெயில் சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாக சுவிட்சர்லாந்தில் திறக்கப்படவுள்ளது.
சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தை குறைக்க ஆல்ப்ஸ் மலைப் பகுதியின் கீழ் 57 கி.மீ. நீளமுள்ள கோத்தார்ட் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் ரயில் வலையமைப்பின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை இருக்கும்.
இந்த சுரங்கப்பாதையை பொறியியல் அற்புதம் என்றும் சுவிஸ்சின் துல்லியத்தன்மையோடு குறித்த நேரத்தில் மற்றும் 12 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
லாட்டரி குலுக்கல் முறையில் இந்த சுரங்கப்பாதையில் முதலில் பயணம் செய்யவிருக்கும் 500 பேர் தேர்வு செய்யப்படுவர்.
வரும் டிசம்பர் மாதம் முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, 250க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும், 65 பயணிகள் ரயில்களும் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், இது ஏற்கனவே உலகின் மிக நீண்ட சுரங்க ரெயில் பாதையாக தற்போது இருக்கும், ஜப்பானின் செய்கான் ரெயில் சுரங்கப்பாதையை இரண்டாம் இடத்துக்கும், பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே உள்ள 50.5 கிமீ நீளமான , இங்கிலீஷ் கால்வாய்க்கு அடியில் செல்லும் சானல் சுரங்க ரெயில் பாதையை மூன்றாம் இடத்துக்கும் தள்ளிவிட்டது.
ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கல், பிரெஞ்ச் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் மற்றும் இத்தாலியப் பிரதமர் மேட்டியோ ரென்ஸி ஆகியோர் இந்த ரெயில் சுரங்கப் பாதை திறக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
இது எங்களைப் பொறுத்தவரை ஸ்விஸ் அடையாளத்தின் ஒரு பகுதி, என்றார் ஸ்விட்சர்லாந்தின் போக்குவரத்து அலுவலக இயக்குநர் பீட்டர் ஃப்யூக்லிஸ்டேலர்.
“எங்களுக்கு, ஆல்ப்ஸ் மலையை வெல்வது என்பது, டச்சுக்காரர்களுக்கு கடலில் மூழ்கி ஆய்வு செய்வதைப் போல மகிழ்ச்சி தரும் விஷயம்” என்றார் அவர்.
பிபிசி