வெடித்து சிதறியவை ஊடறுத்தன.

article_1465268696-aaசேதங்கள் பல
எச்சரிக்கை விடுப்பு
37 பேருக்குக் சிறு காயம்
உடன் அறிவிக்க இலக்கங்கள்
முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு

வழமைக்குத் திரும்ப 48-96 மணிநேரம் எடுக்கும்

-அழகன் கனகராஜ்

தீப்பற்றிக்கொண்ட கொஸ்கம சாலாவ படைமுகாமின் ஆயுதக்கிடங்கு விடியவிடிய வெடித்துச் சிதறி, விடிந்தும் வெடித்துச் சிதறியமையால், ஆயுதக்கிடங்கும் அதனை மிக அண்மித்த பகுதியும் சாம்பராகக் காட்சியளித்தன. ஞாயிற்றுக்கிழமை (5) மாலை 5.45க்கு வெடிக்க ஆரம்பித்த ஆயுதக் கிடங்கு, 17 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் 11.45க்குப் பின்னரும் சின்னஞ்சிறியதாய் வெடித்துக்கொண்டிருந்தது.

நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருந்த சீரற்ற வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை ஓய்ந்திருந்த நிலையில், இடி முழக்குவதைப்போல, கொஸ்கமப் பகுதியே ஞாயிறு மாலை முதல் திங்கள் வரையிலும், விடியவிடிய அதிர்ந்தது. விடிந்ததன் பின்னர், அவ்வப்போது சத்தங்கள் கேட்டன.

காதைக் கிழிக்கும் பாரிய சத்தத்துக்குப் பின்னர் மேலெழும்பும் தீச்சுவாலை, கண்ணுக்கெட்டிய
தூரத்திலிருந்து பார்க்கும் போது, கரும்புகையைக் கக்கிக்கொண்டிருந்தது.

அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, காரிருள் சூழ்ந்துகொண்டிருந்தமையால், ஆயுதக்கிடங்கு தீப்பற்றியெரிந்ததை மிகத்தூரத்திலிருந்து விடிவிடியத் தெளிவாக அவதானிக்க முடிந்தது.

கிடங்கிலிருந்து கிளம்பிய பாரிய ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், முகாமிலிருந்து சுமார் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களின் கூரைகளைப் பிய்த்துச் சென்றிருந்தன. சுவர்களில் பாரிய துளைகள் இருந்தன.

மோட்டார் குண்டு, ஷெல் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருளின் கவசங்கள், நிலங்களில் ஆங்காங்கே பொதிந்துகிடந்ததையும் அவதானிக்க முடிந்தது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் வெடிபொருட்கள் பதம்பார்த்திருந்தன. வடக்கில் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தலைகொய்தது போன்று பனை மரங்கள் எவ்வாறு காட்சியளித்தனவோ, அதேபோல, சாலாவ முகாமிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் இருந்த மரங்களின் தலைகளும் கொய்யப்பட்டுக் காட்சியளித்தன.

முகாமைச் சுற்றியும் அதற்கு அண்மையிலும் இருந்த மரங்கள் கருகிப்போயிருந்தன. முகாமைச்சுற்றி முட்கம்பி வேலிகளுக்காக நாட்டப்பட்டிந்த சீமெந்துத் தூண்கள், கம்பிகளை இழந்து நின்றுகொண்டிருந்தன.

பல ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தைக் கடத்தும் மின்வடத்தைத் தாங்கிச்சென்ற சீமெந்துத் தூண்களில் சில, இடையில் முறிந்து, இடுப்பை இழந்திருந்ததைப்போல காட்சியளித்தன. இன்னும் சில, தலையைத் தொங்கவிட்டவாறு வடத்துடன் தொங்கிக்கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

சாலாவ முகாமிலிருந்து சுமார் 200-300 மீற்றருக்கு அப்பாலுள்ள மாவல்கம மலையின் மீதேறியே, இவற்றை அவதானிக்கமுடிந்தது.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள், பிரதேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையினால், நேற்றையதினம், தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. பல வீடுகள் கூரைகளை இழந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

சுமார் 5 கிலோமீற்றருக்கு அப்பால் அபாயவலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வலயமானது, ஒரு கிலோமீற்றருக்குச் சுருக்கப்பட்டது. அப்பகுதிக்குள், பொதுமக்கள் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் எடுக்கும் என்று மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்றபோது, அந்த முகாமில் கடமையிலிருந்த படையினர் தொடர்பில் தகவல்கள் இல்லை என்றொரு கருத்தும் பரப்பப்படுகின்றது. அதனை, உறுதிப்படுத்தமுடியவில்லை. எனினும், அந்தநேரத்தில், முகாமிலிருந்த சகலரும், உடுத்தியிருந்த ஆடைகளுடன் சிலர் குளித்துக்கொண்டிருந்த நிலையிலேயே உடனடியாக வெளியேறியமையால், உயிரச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, வெடிப்பு சம்பவம் இடம்பெற்றபோது தப்பியோடி வெளியேறிய இராணுவ வீரரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, அங்கு சிதறிக் கிடக்கின்ற வெடிபொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையும், வெடிக்காத வெடிபொருட்களைச் செயலிழக்கச்செய்யும் பணிகளில் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் ஈடுபட்டுவருகின்றனர். ஆக மொத்தத்தில், அப்பகுதியானது இறுதி யுத்தமொன்று இடம்பெற்ற இடம்போலவே காட்சியளிக்கின்றது என்றால் தவறில்லை.

37 பேருக்கு சிறு காயங்கள்

கொஸ்கம இராணுவ முகாமில் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தினால் ஒருவர் பலியானதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. இதில், 35பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவத்தையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டோரில் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோர், அத்தனகல விஹாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தினால் தங்களுடைய கால்நடைகள் பல இறந்துவிட்டன. சில கால்நடைகள் சன்னங்கள் பட்டும், சில பயத்திலும் இறந்துவிட்டன என்றும், அங்கிருந்து வெளியேறியோர் தெரிவித்தனர்.

சேதங்கள் பல

இந்தச் சம்பவத்தினால், நாம் மேலே குறிப்பிட்டது போல வீடுகள் சுக்குநூறாகின, வாகனங்களுக்கும் கடுஞ்சேதம் ஏற்பட்டது. மின்தூண்களும் முறிந்துவிழுந்தன. இவ்வாறான நிலையில், கொஸ்கம உப-மின்நிலையம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் அவிசாவளை பிரதேசத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தேவை ஏற்படின் சீதாவக்க உப-மின்சார உற்பத்தி நிலையமும் மூடப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறி, சன்னங்கள், துகள்கள் சிதறிப் பாய்ந்தமையால், சாலாவ வைத்தியசாலையும் சேதமடைந்தது. அதன் கூரைகளும் சேதமடைந்திருந்தன.

எச்சரிக்கை விடுப்பு
புகையைச் சுவாசிக்காதீர்கள்

இத்தீ விபத்தையடுத்துக் கிளம்பிய புகையைச் சுவாசிப்பவர்களுக்கு, சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்தப் பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது. குறித்த பகுதியில் காணப்படும் புகையைச் சுவாசிப்பவர்களுக்கு, ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் என சூழல் நலன்கள், உடல்நலன் மற்றும் உணவுப் பராமரிப்பு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

நீரைக் குடிக்காதீர்கள்

அப்பிரதேசத்தில் குடி நீரைப் பயன்படுத்தும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் உள்ள கிணறுகளைச் சுத்தம் செய்யும் வரையிலும், அந்தக் கிணற்று நீரைக் குடிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிதறியவற்றைத் தொடாதீர்கள்

ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து வெடித்துச் சிதறியவற்றையும் சந்தேகத்துக்கு இடமான மர்மப்பொருட்களையும் எடுக்கவே வேண்டாம் என்று இராணுவம் அறிவித்துள்ளது.

உடன் அறிவிக்க இலக்கங்கள்

மர்மப்பொருட்களைக் கண்டால், கீழ்கண்ட இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு படைத்தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் தொலைபேசி இலக்கம்

011-3818609, 011-3046128, 011-3046129, 011-2580518, 077-7303274
இராணுவம் – 011-3818609
அவசர உதவி – 117

முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு

பாதுகாப்புச் சபை கூடியது

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பில், கலந்துரையாடுவதற்கு பாதுகாப்புச் சபை, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்றுத் திங்கட்கிழமை அவசரமாகக் கூடியது.

இந்த அவசரக்கூட்டத்துக்கு முன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பாதுகாப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், இருவரும் ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

பிரதமர் ரணில் விஜயம்

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தற்போதைய கள நிலைவரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேரில் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பில் ஆராயும் கூட்டமொன்று, சீதாவாக்கை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த சம்பவம் இடம்பெற்போது, இராணுவ முகாமுக்கு அண்மித்த பகுதியிலிருந்து 1,763 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. கைத்தொழில்சாலைகள், வாகனங்கள், வீடுகள்- 75 சேதமடைந்துள்ளன. அதில், 50 வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

பார்க்க வரவே வேண்டாம்

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பார்ப்பதற்கு பலரும் வருகைதருகின்றனர். அவ்வாறு வரவேண்டாமென்றும், பொதுமக்கள், உடமைகள் மற்றும் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் செயற்படுமாறும் படைத்தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலைகள் உஷார்

இதேவேளை சம்பவத்துக்கு பின்னரான செயற்பாடுகளுக்கு முகங்கொடுப்பதற்காக வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 18 அம்புலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ் வைத்தியசாலைக்கு மேலதிகமாக, கரவனெல்ல, கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் அவிசாவளைக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ, நேற்றுத் திங்கட்கிழமை மாலை 5.50க்கு முழுமையாக அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த ஆயுதக்கிடங்கு தீப்பற்றியமையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்மிரர்

Copyright © 7745 Mukadu · All rights reserved · designed by Speed IT net