ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

201606080957588247_California-man-sentenced-to-12-years-for-attempting-to-join_SECVPF-300x171சிரியா நாட்டில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாலிபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி, உலகம் முழுவதும் அகன்று பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் நோக்கத்தில் பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ், பெல்ஜியம் தலைநகரான புருசெல்ஸ் உள்பட உலகின் பல பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோல் மேலும் பல தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களின் மூலமாக வலைவிரித்து, தங்களது படைக்கு இவர்கள் ஆள்பிடிக்க காத்திருக்கின்றனர்.

இவர்களின் சதிவலையில் உலகின் பல நாடுகளில் உள்ள ஆண்களும், பெண்களும் சிக்கி, சீரழிகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சிக்கும் பலர் உளவுத்தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் கைது செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், அகாம்போ பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் மைக்கேல் டியூசன்ட்(22) என்ற வாலிபரின் வலைத்தள தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா எல்லையோரம் உள்ள கனடாவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சிரியா நாட்டுக்கு செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவர்மீது கலிபோர்னியா மாநில தலைநகர் சாகரமென்ட்டோ நகரில் உள்ள தேசிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது பிடிபட்ட நிக்கோலஸ் மைக்கேல் டியூசன்ட், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டார். மனநல நிபுனர்களிடம் சிகிச்சைபெற்று மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக சான்றளிக்கப்பட்டது.

பின்னர், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது தீவிரவாதத்துக்கு துணைபோக முயன்ற குற்றத்தை நிக்கோலஸ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, குற்றவாளி நிக்கோலஸ் மைக்கேல் டியூசன்ட்-டுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Copyright © 8233 Mukadu · All rights reserved · designed by Speed IT net