நமக்கு ஊரில்லை
===============
கொண்டாடட்டும்
திருவிழாக்கடையில்லா
திரு நாளிது
வரவு கணக்கில்லா
வரும் நாளிது!!
துப்பாக்கி வெடி
துரத்து மென்றால்
தொட்டிலோடு போயிருக்கலாம்
என்று தோணுது
எதற்கு
ஈர் ஐந்து விரல்கொண்ட
பாதம்
பட வைத்தாய்
எம் மண்ணில்!
யார் அகதிகள்
அடைகாக்கயிருந்த
தாய்ப்பறவைகள்
குஞ்சுகளை விட்டு
குடிபோனதால்
நெஞ்சுகள் வீதியில்
நிர்மூலமாகியதால்
அகதியாய் போனவர்கள்
யார்!
ஐம்பத்தியாறு
மேட்டுக்களில்
கையிலும் வாயிலும்
பூட்டுக்களோடும்
பூனைபோல் நடமாடும்
நரைத்த சாயம் கொஞ்சம்
விறைத்த சாயம் கொஞ்சம்
நாயாய் அகதிப்பாயாய்!
சிரியா நோக்கி படையெடுப்பு
சிதறின கொஞ்ச உயிரா?
ஆப்கானில் அகலக்கால் மிதிப்பு
அழிந்தது விழித்த கண்களே
எல்லைக் கோடு கிழித்தயிடத்தில்
முல்லைப் பூக்களும் கருகின!
அகதி யென்ற சொல்லை
முன் நெஞ்சிலும்
பின் முதுகிலும்
கூர்க்கம்பியிட்டு
கொடியேற்றியது
ஈழத்தமிழனின்
இருப் பிழந்த பின்னே!
மேகங் கலைந்துகொண்ட
நேரம்
விண்மீனை தேடிவந்த
பனைங்குருத்து
பள்ளிச்சிறார்கள்
வெளித்தெரிந்த
வேளையெல்லாம்
இலைத் தழும்புகாட்டி
விழுந்தோட வேகம்கொண்டார்
அகதி ஓலைகளாய்!!
அலைந்தாலும்
பல நிலை கலைந்தாலும்
நதிக்கும் ஓர் இடமுண்டு
காய்ந்தாலும் பல
இரவு பகல் கிடந்தாலும்
நதியணைக்க ஓர் ஓடமுண்டு!!
எமக்கு இல்லை
கைக ஊன்றி எழுந்துநிற்க
ஒரு கால்தடம் இல்லை
சட்டையின் பொத்தான்
அதிகமானால்
களைந்து கொள்ள முதல்
காலியான உயிர்களுமுண்டு!
இந்த ஐரோப்பா
வா என்று அழைத்தது
வாய் திறக்காமல்
வந்து நின்றவரெல்லாம்
கொஞ்சக்காலம்
தம் நிழலை தேடி
தாடி வளர்த்தார்!
ஐ நா மன்றத்தின்
முன்பக்கம் மூங்கீல்தடி
முறிந்து போகின்றது
நிழலுக்கு ஒதுங்கியவர்
கூரையை மேய்ந்ததால்
அதனால் என்னவோ
தடி செய்தவரெல்லாம்
தரையில் நிற்கின்றார்!
அகதி என்பது
சொந்த நிலத்தை விட்டு
துரத்தப்பட்டவர்தான்
அகத்தில் தீயை சுமந்து
எரிந்து கொண்டிருக்கின்றார்கள்
சாமபல்களை உண்டபடி!
ஈராக்கின் மிச்சம்
ஈழத்தின் இறுதி கண்ணீர்
சிரியாவின் முறிந்த சிறகு
ஆப்கானிஸ்தானின் அலறல்
ஐ நாவின் நாடகத்தில்
விழுந்த பாத்திரங்கள்……
ஈழநிலவன்