இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்.

13606523_1194656110578647_7666911444777804552_n
இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.

இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள்.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபது வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
13619801_1194656157245309_1382851867119775909_n
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.

இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.

உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.

இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் – தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.

நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.

போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.

சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.

போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net