பிரான்ஸை வீழ்த்தியது போர்ச்சுக்கல் யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை.
யூரோ கோப்பை 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டத்தை வென்றது. செயின்ட் டெனிஸில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அபாரமாக வீழ்த்தி முதல் முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், கூடுதல் அவகாசமாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஆட்டம் மிகவும் விறுவிறுப்படைந்த நிலையில் முதல் 15 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் சிறிய இடைவேளைக்குப் பிறகு அடுத்த 15 நிமி்ட ஆட்டம் துவங்கியது. இந்த நேரத்தில் போா்ச்சுக்கல் அணி வீரரான எடர் அபாரமாக ஒரு கோலை அடித்து போர்ச்சுக்கல் ரசிகா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா். இதனையடுத்து அரங்கம் முழுவதிலும் இருந்த போர்ச்சுக்கல் ரசிகர்கள் ஆரவாரக் குரல் எழுப்பினர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து பாதியில் விலகிய நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். பின்னர் அடுத்த 12 நிமிட ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்ய பிரான்ஸ் வீரர்கள் துடித்தனர்.
எனினும் போர்ச்சுக்கல் வீரர்களின் கடைசி நிமிட ஆட்டம் காரணமாக அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்கள் மற்றும் அதற்கும் கூடுதலாக அளிக்கப்பட்ட 2 நிமிடங்கள் ஆக மொத்தம் கூடுதல் நிமிடங்களான 32 நிமிடங்களில் போர்ச்சுக்கல் அணி அடித்த 1 கோல் காரணமாக யூரோ கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி அந்த அணி சாதனை படைத்துள்ளது.
முன்னதாக யூரோ-2016 கால்பந்து தொடர் கடந்த மாதம் 10-ம் தேதி பிரான்சில் துவங்கியது. இந்த தொடாில் 24 அணிகள் கலந்து கொண்டன. அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி பிரான்சும், வேல்ஸை வீழ்த்தி போர்ச்சுக்கல்லும் இறுதி போட்டிக்கு முன்னேறின. ஒரு மாத காலமாக உலகம் முழுவதும் தொற்றிக் கொண்டிருந்த யூரோ கால்பந்து ஜுரம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.