புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.

13612171_10209996676378834_5764426271210121402_n
“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்”.

ஈழத்தில் போர் முற்றிய காலத்தில் மெல்ல இந்த மண்ணுக்குப் பிரியாவிடை கொடுத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்த சந்ததி இன்று உலகின் எட்டுத் திக்கும் சிதறுண்டு குடி கொண்ட நிலையில் இந்த மண்ணிலிருந்து எழும் குரலாக வெளிப்பட்டிருக்கிறது இந்த ஆவணப் படம்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தாயகம் நோக்கிய என் திடீர் விஜயத்தில் கிடைத்த நான்கு நாட்களில் ஒரு மதியப் பொழுதை இந்த ஆவணப் படத்தின் முதல் திரையிடலில் வந்து கலந்து கொள்ளுமாறு படத்தின் இசையமைப்பாளராகப் பங்கேற்ற சகோதரன் மதீசன் கேட்டிருந்தார். ஆவணப் படம் காண்பிக்கும் ஆனைக்கோட்டையில் இருக்கும் யாழ்ப்பாண அரங்கக் கலைக் கழகத்துக்குப் போகிறேன். அங்கே தொழில் நுட்பக் கோளாறுகளால் திரையிடல் தாமதப்பட, நேரச் சிக்கலால் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. ஆனாலும் இந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும் என்ற தீரா வேட்கை என்னுள் இருந்தது. கண்டிப்பாக இந்தப் படைப்பு முக்கியமானதொன்றாக இருக்கும் என்ற என் உள் மன உந்துதலே அதற்கான காரணம். ஆறு மாதங்கள் கழித்து நேற்று “புங்குடுதீவு – சிதைவுறு நிலம்” என்ற இந்தப் படைப்பைப் பார்த்து முடித்ததும், ஒரு நேர்த்தியான ஆவணப் படத்தைப் பார்த்தோம் என்ற திருப்தியை மேவு இந்தப் படைப்பின் வழியே வெளிப்பட்ட புங்குடுதீவு மண்ணின் குமுறலின் தாக்கத்துடனேயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

“வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” என்பான் சகோதரன், படைப்பாளி அகிலன்.
ஆண்டாண்டு காலமாய் ஆண்டு அனுபவித்த தன்னுடைய வீட்டையும், சொந்த மண்ணையும் விட்டுப் பெயர்பவன் அந்த நினைவுச் சுமை மட்டும் விட்டகற்றி வெளியேற முடியாது. அது உள்ளக இடப் பெயர்வுகளுக்கும் பொருந்தும்.

என் வாழ்நாளில் அதுவரை போயிராத கரம்பன் மண்ணுக்குப் போயிருந்தேன் ஐந்து வருடங்களுக்கு முன். ஓட்டோக்கார அண்ணரும் நானும் தான், என்னுடைய மனைவியின் வீட்டைத் தேடிப் போகிறோம். என்னுடைய மாமி சொன்ன குறிப்புகளை வைத்து வழி நெடுக விசாரித்துக் கொண்டே. அந்த வீடும் சூழலும் இருந்த இருந்த கிடையை அந்தப் பிரதேசத்தின் அந்நியனான எனக்கே ஏற்றுக் கொள்ளமுடியாத மன நிலைக்கு ஆட்படுகிறேன்
அந்தப் பகிர்வை இங்கே கொடுத்திருக்கிறேன் =>
தொலைத்த வீட்டைத் தேடிப் போன கதை http://www.madathuvaasal.com/2011/08/blog-post.html
ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிட்டிய நேரடி அனுபவம் கொண்ட தேக்கத்தில் “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்” படைப்பைப் பார்க்கத் தொடங்குகிறேன்.

லண்டனில் வதியும் தங்கேஸ் பரம்சோதி என்னும் இளைஞரால் தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்கான மானிடவியல் கள ஆய்வுக்கான கற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படம் அவரின் வழியாக விரிகிறது.

இவரே இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கம் சக இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.
புங்குடுதீவு நிலம் சார்ந்த வரலாறு, இடப் பெயர்வு, போர்க் காலத்தில் இந்தப் பூமியில் தங்கிய மிஞ்சிப் போன ஒன்றிரண்டு குடும்பங்கள், இந்து கிறீஸ்தவ பக்தி நெறி, விவசாயம், சாதியம் என்று பரந்து விரியும் இந்தத் தேடலும் பதித்தலிலும் இந்தப் புங்குடுதீவு மண் எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்ற வேட்கையின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன்.

இந்தப் படைப்பு ஆவணமாக மட்டுமன்றி விவரணச் சித்திரமாகவும் படைக்கப்பட்டிருப்பது விசேஷமாகக் குறிப்பிடவேண்டியதொன்று.

இதில் புங்குடுதீவில் இருக்கும் பல்வேறு மானுட தரிசனங்கள் இருந்தாலும் முக்கியமாக நான்கு பேரின் பங்களிப்பு குறித்த ஆணவ முயற்சியின் நோக்கத்தை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, இந்த மண்ணின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை கொண்டவராகத் (optimist) தன் கருத்தைப் பதிவாக்கும் அதே வேளை,
பேராசிரியர் குகபாலன் (ஓய்வு நிலை, புவியியல் துறை (யாழ் பல்கலைகழகம்) அவர்களது கருத்துகள் தர்க்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த மண்ணின் போக்கை நிறுவுகின்றது.

30 ஆண்டுகள் கனடாவில் வாழ்க்கைப்பட்டு மீண்டும் புங்குடுதீவு வந்து தன் மண்ணில் நின்று நிலவிய வாழ்வியலைத் தேடிக் கொணரும் மூச்சோடு இயங்கும் அருணாசலம் சண்முகநாதன், 1991 பாரிய இடப் பெயர்விலும் பெயராது இங்கே தங்கி விட்ட புவனேஸ் கிருபா என்ற பெண் இவர்களும் முக்கிய பங்காளிகள் இந்தக் கள ஆய்வுப் பணியில்.

20000 பேருடன் வாழ்ந்த புங்குடுதீவுச் சமூகம் இன்று ஐநூற்றுச் சொச்சம் பேருடன் எஞ்சியிருப்பதற்கான காரணிகளைத் தேடுகிறது.
புங்குடுதீவில் புனருத்தாரணம், குடமுழுக்கு செய்யப்படும் ஆலயங்கள் குறித்த செவ்விகளும், பகிர்வுகளும் ஏன் இவ்வளவு நீளமாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன என்ற என் கேள்விக்கு அதன் நீட்சியாக வரும் பதிவுகள் நியாயப்படுத்துகின்றன. எள்ளலோடு சில கேள்விகளைப் பார்வையாளனுக்கே (குறிப்பாகப் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு) விட்டுவிடுவது புங்குடுதீவுக்கு மட்டும் பொருத்திப் பார்க்கவேண்டியதல்ல.
“கோயில் இருந்தால் தான் சனம் வரும்” என்ற கோணத்தில் நியாயப்படுத்துபவர்களின் கருத்தையும் பதிவு செய்கிறது.

இந்த ஆவணப்படத்தின் முக்கிய கருதுகோளை முன்னுறுத்திய செவ்விக் கோவைகள், அந்தந்தச் செவ்விகளின் வழியே விரியும் பொருத்தப்பாடான காட்சிகள் என்று ஒரு நேர்த்தியான திரை வடிவத்துக்கு திரு.ஞானதாஸ் காசிநாதரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது.
துணை நின்றிருக்கும் சிறப்பான படத்தொகுப்பிலும்
ஜே லோகேந்திராவோடு இவரும் கை கொடுத்திருக்கிறார்.

புங்குடுதீவு மண் கடல் வளர்த்தால் சூழப்பட்டது, குறிகாட்டுவான் என்ற முக்கிய இறங்குதுறையைத் தன் சிறகாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட புவியியல் அமைப்பில் நிலவும் வேளாளர், கடல் தொழிலாளர் என்ற பிரிவு இன்றும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதையும் காட்டுகிறது இவ் ஆவணம். இதில் விசித்திரமான செய்தி இங்கே பதிவாக்கப்படுகிறது அது என்னவென்றால் தம்மை வேளாளர் என்று கூறிக் கொள்ளும் சமூகமும் தமக்கெனச் சங்கம் அமைத்து மீன் பிடித் தொழிலில் இயங்குகிறார்கள்.

இந்த ஆவணப் படத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை உறுத்தாது, மண் சார்ந்த ஒலி வெளிப்பாடாக அமைந்ததைக் கவனித்து ரசித்தேன். செல்வன் மதீசன் இப்படியானதொரு கனதியான முயற்சியில் அனுபவமிக்க துறை சார்ந்த வல்லுநராக வெளிப்பட்டிருப்பதைப் பெருமையோடு பார்க்க முடிகிறது.
ஒளிப்பதிவு சுரேந்திரகுமார் மற்றும் தங்கேஸ் ஆகியோர் பங்களிப்பிலும் சிறப்பான கவனம் பெறுகிறது.
கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து புனித சவேரியார் ஆலயம் வரையும், மீன் பிடி, விவசாயம், பனையேறும் தொழில் என்றும் புங்குடுதீவு மண்ணைப் பிரதிபலிக்கும் பண்பாட்டு, தொழில் விழுமியங்களை இன்றைய நடப்புகளோடு பிரதிபலிப்பது மட்டுமன்றி
சாதி வேறுபாடுகளால் புறந்தள்ளப்பட்ட சமூகமே உயர்குடி என்று சொல்லப்படுவோரின் நில உடமைகளைக் காத்து வரும் அறத்தைக் காட்டி அந்த சமூகத்துக்கு புலம் பெயர்ந்தும் தம் சொத்துகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நில உடமையாளர்கள் என்ன பதிலீடு செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி முன்னுறுத்தப்படுகிறது.

“ஒழுங்கான நிலம் தான் ஒழுங்கான சமூகத்தைப் பிரதிபலிக்கும்” என்பதே ஒட்டு மொத்த படைப்பின் அடி நாதமாய்த் தொனிக்கிறது. செல்வி வித்யா படுகொலையின் பின்னால் இருக்கும் சமூகப் பிறழ்வுகள், ஒழுக்கவியல் சிந்தனைக்கும் புவியியல் அமைப்புக்கும் உள்ள தொடர்பு போன்றவை காரண காரியத்தோடு ஆராயப்படுகின்றன இங்கே.
நண்பர் ரவிவர்மா இந்த ஆவணப் படத் திரையிடலுக்குப் பின் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. இந்தப் படைப்பு முன் வைக்கும் முக்கியமான சிக்கல்களும் சவால்களும் ஈழத்தின் மற்றைய இடங்களுக்கும் கூடப் பொதுவானவை.

ஈழத்தின் திரைக் கலை முயற்சிகளில் ஆவணப் பட உருவாக்கம் என்பது எந்தவித சமரசமுமின்றி வெகு சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது. அதை “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்” மீள நிறுவுகிறது. என்னைச் சந்திக்கும் ஈழத்தின் இளைய படைப்பாளிகளுக்கும் நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஆவணப் படங்களில் கவனமெடுங்கள். தென்னிந்திய சினிமாவை அடியொற்றிய குறும்படங்கள் செய்யப் போதிய காலம் இருக்கிறது ஆனால் எங்களுக்கு முந்திய ஒரு தலைமுறை அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அவர்களின் அனுபவங்களும், வாழ்வியல் வரலாறுகளும் அவர்கள் இருப்பில் வைத்து உள்ளவாறு ஆவணப்படுத்தப்படுவதே ஈழத்தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தேவை.
13592292_10209979545790580_3140653979872327559_n
போன கிழமை ஊரிலிருந்து என் அப்பா பேசினார்,
“ஐயா அப்ப இனி இங்கை வந்து நீங்களெல்லாம் இருக்க மாட்டியளோ”
அவரின் அந்த ஆதங்கத்தை எதிர் கொள்ள முடியாத எனக்கு மீண்டும் பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது இந்த
“புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்”
கானா பிரபா
11.07.2016

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net