யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதுடன்,அதன் அறிக்கைகளானது தற்போது சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக சட்டமா திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த கூட்டு வன்புணர்வுக் கொலை பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதியே பணியாற்றுகின்ற நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில், வழக்கு ஒன்று மூன்று மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்படவுள்ளமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்வின்