வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
vavuniya1_CI
வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் நிலவிய கருத்து வேற்றுமை வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மையோரின் தெரிவுக்கமைவாக ஓமந்தையில் அமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் இந்த வாக்கெடுப்பின் முடிவில் அறிவித்திருந்தார்.
ஆயினும், மக்கள் நடமாட்டமற்ற பகுதியில் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது என கிராமிய பொருளாதார அமைச்சகம் அறிவித்திருந்த பின்னணியில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுமேயானால், வவுனியா, கெப்பிட்டிகொல்லாவ, மதவாச்சி, வெலிஓயா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஓமந்தையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட வவுனியா அரச அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார, எந்தவொரு அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஓர் உடன்பாட்டுக்கு வரும் வரையில் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
160713144107_vavuniya3_640x360_bbc_nocredit
இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தாமதிக்கும் பட்சத்தில் இதற்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதி அரச திறை சேரிக்குத் திரும்பிச் செல்லும் ஆபத்து உண்டு என்றும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.
BBC

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net