வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா வியாழ்கிழமை 14-07-2016 அன்று நடைபெற்றது
காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார் நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சுதாகரன், கரச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் , உத்தியோகத்தர்கள், குருக்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி இருந்தனர்.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் இடது கரையில் மேற்குப் புறமாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தினையே தீர்த்தக் கேணியாகவும் கொண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயத்திற்கு 99 அடி உயரமும் 36 அடி அகலத்தை கொண்டு நவ தளங்களுடன் கூடிய இராஜ கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவே நடை பெற்றது இவ் இராஜகோபுரத்தினை ஆறு கோடி செலவில் இரண்டு வருடங்களிற்குள் முடிக்க இருப்பதாகவும் இதற்கான பணத்தினை புலம்பெயர் உறவுகள் மற்றும் வடக்கு வாழ் மக்களிடம் இருந்து எதிர் பார்ப்பதாகவும் ஆலய பரிபாலன சபையினரும் ஆலய இராஜகோபுர திருப்பணி சபையினரும் தெரிவிக்கின்றனர் இரனைமடு கணகாம்பினை அம்மன் ஆலயம் யோகா் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட கோவில் எனக் குறிப்பிடப்படுகின்றது…
மேலே வந்தது இன்றைய செய்தி… தொடர்வது செய்திப் பார்வை…
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதான் முது மொழி கூறியதே தவிர, சுற்றியுள்ள மக்கள் பட்டினியிலும், வறுமையிலும் தவிக்க வானளாவிய கட்டடங்களையும், மணிமண்டபங்கள், கோபுரங்களையும், கோடி பணம் செலவளித்து கட்டுமாறு முதுமொழிகளோ பழ மொழிகளோ, அறவாக்குகளோ கூறவில்லையே…
வடக்கில் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிற கோவில்கள் போதாது என்று முழத்திற்கு ஒரு கோவில் முளைத்துக்கொண்டு இருப்பதுடன், கோடி கோடியாக பணமும் கொட்டப்படுகின்றன… என்றால், கண்முன்னே ஆயிரம் ஆயிரம் மக்கள் பலியாகி, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வருமானம் இன்றி தவிக்க, 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலையில்லாது திண்டாட 600 லட்சத்தில் ராஜகோபுரம் தேவையா?
பண்பாடும், கலாசாரமும், கோவில்களை மையமாக கொண்டு வளர்ந்தது அவை தமிழ் மக்களின் பண்பாட்டு கலாசார விழுமியங்களை கட்டிக்காக்கும் மூலங்கள் என்பதற்காக, கோடிகளை கொட்டி ஆலையங்களை அமைத்தால்தான் தாம் அங்கு வீற்றிருந்து அருள் பாலிப்போம் என இந்துமதக் கடவுளர்கள் சொன்னார்களா?
இந்த 600 லட்சங்களை செலவளித்து, ஒரு உற்பத்தி ஆலையை அமைத்தால் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்? அதனால் எத்தனை வயிறுகள் பசியாறும்? இத்தனை அழிவுகளை சந்தித்த வன்னியிலுமா பணத்தைக் கொட்டி ஆலையங்களை உருவாக்கும் கலாசாரம் தொடங்குகிறது ?
குளோபல் தமிழ்