துருக்கியில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு. விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம்.
துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் ராணுவ நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்நாட்டு பிரதமர் பின்னாலி எல்டரீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள அதர்துக் விமான நிலையம் மூடப்பட்டு டேங்கிகளுடன் ராணுவத்தினர் ரோந்து செல்கின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் துருக்கி நாட்டில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் கடும் துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.