அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 109வது நிமிடத்தில் ஈடர் அடித்த கோலால், போர்ச்சுகல் அணி, ஐரோப்பிய கோப்பையுடன் நாடு திரும்பியது. இந்த ஒரே கோலால், ஒரே நாளில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு இணையாக ஈடரும் பிரபலமாகி விட்டார். ஆனால் ஈடர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அதிகம்.
ஈடருக்கு 12 வயதாக இருக்கும் போது, அவரது தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தில் வசித்து வந்த அவர், ஈடரின் சித்தியை கொலை செய்த வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தாய்நாடான கினியாவில் வசித்த ஈடருக்கு, சிறுவயது முதலே கஷ்ட ஜீவனம்தான். ஆனால் ஈடரின் ஒரே சொத்து கால்பந்து திறமைதான். அதுதான் அவரது முதலீடும் கூட.
கினியாவில் சிறிய கிளப் அணிகளுக்காக விளையாடி வந்த ஈடர், கடந்த 2008 ம் ஆண்டு போர்ச்சுகலின் அகாடமிகா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் தாயுடன் கினியாவில் இருந்து போர்ச்சுகலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது ஈடருக்கு வயது 20.
போர்ச்சுகலில் ஈடருக்கு கால்பந்து வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. கடுமையான போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. 4 ஆண்டுகள் அகாடமிகா அணிக்காக விளையாடினார். பின்னர் பிராகா அணியில் 3 ஆண்டுகள் . பிரீமியர் லீக் அணியான ஸ்வான்ஸீ சிட்டிக்கு கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சரியாக சோபிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஸ்வான்ஸீ சிட்டி அணி, பிரான்சின் லில்லி அணிககு ஈடரை லோனில் வழங்கியது. பிரெஞ்சு லீக் தொடரில் லில்லி அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடிய ஈடர், 6 கோல்களையும் அடித்துள்ளார்.
கூடுதல் நேரத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி இந்த சதியை செய்து விட்டடாரே என்று பிரான்ஸ் மக்களுக்கு ஈடர் மீது அப்படி ஒரு கோபம் இருக்கிறதாம்.