யாழ்.பல்கலைகழக தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தினை அடுத்து யாழ்.பல்கலைகழக சூழலை சுற்றி பெருமளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு உள்ளமையால் பல்கலைகழக சூழலில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது.
யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ் மரபு புறக்கணிக்கப்பட்டு சிங்கள மரபு பின்பற்றப்பட்டமையால் , இரு தரப்பு மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
குறித்த மோதல் சம்பவத்தில் மாணவ , மாணவிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் பல்கலைகழக வாளகத்தினுள் இருந்த மாணவ மாணவிகளின் துவிச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிள் என்பன சிலவும் சேதமாக்கப்பட்டு உள்ளன.
இந்த மோதல் சம்பவத்தினை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டு மோதலை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் காயமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது யாழ்.பல்கலைகழக சூழலை சூழ பெருமளவான பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட நுழைவாயில் , மாணவ மாணவிகளின் விடுதிகளின் நுழைவாயில் களிலும் பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் விடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் அச்சத்துடன் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.பல்கலைகழக நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அத்துடன் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்து உள்ளதாகவும் , இதனால் விடுதிகளில் இருந்து வெளியேறி தாம் உடனடியாக எவ்வாறு தமது ஊருக்கு செல்வது என தெரியாது தவித்து நிற்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குளோபல் தமிழ்