தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.
‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’, ‘கடற்கரையில் ஒரு ஆலமரம்’ போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை.
சமீபமாக, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கூத்தன் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி ஈஸ்வர லாலா தாஸ் தெருவில் உள்ள மகனது இல்லத்தில் ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
அஞ்சலி | ஞானக்கூத்தன் | 1938-2016 | பேப்பர் பையன்
இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.
கைகால் கழுவிப் பல்தேய்த்து
வெளியே போகிறான் பேப்பர் பையன்.
கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்
பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.
அங்கே வருகிறான் பேப்பர் பையன்.
குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்
தினமலர் இந்தியா டுடே அப்புறம்
ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்று
தனித்தனியாகப் பிரிக்கிறார்கள்.
இரண்டு சக்கர வண்டியில் எற்றி
தான் நனைந்தாலும் தாள் நனையாமல்
கீழ் வீட்டில் மாடியின் மேல் என
அந்தந்த வீட்டில் போட்டுவிட்டுக்
கால்நடையாகத் திரும்புகிறான்.
ஆறு மணிதான் ஆகிறது.
தேநீர் தருகிறாள் அவன் அம்மா.
தேநீர் பருகிப்
பாடப்புத்தகத்தைப்
பிரித்துக் கொள்கிறான் பேப்பர் பையன்.
பாடம் ஒன்றைப் படிக்கிறான்.
திரும்பத் திரும்பப் படிக்கிறான்.
ஊரில் இல்லாதவர் வீட்டுக்குள்
பேப்பர் போட்டது நினைவுவர
ஒட்டம் பிடிக்கிறான் பேப்பர் பையன்.
-ஞானக்கூத்தன் (1938-2016)
ஓவியம்: ரஷ்மி