வித்தியா வன்புனர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறும்
வித்தியா வல்லுறவு கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான விசாரணை, வலது குறைந்த பெண் மீதான கூட்டுப்பாலியல் வழக்கு, தாதியர் வேலைநிறுத்த தடையுத்தரவு ஆகிய மூன்று முக்கிய வழக்குகள் யாழ் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கறுடைய விளக்கமறியல் சம்பந்தமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த விசாரணையின்போது, யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வித்தியா பாலியல் வல்லுறவுக் கொலை சம்பந்தமான சந்தேக நபர்கள் 9 பேரையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
அத்துடன் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முடிவுற்றுள்ள வாய் பச முடியாத பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்பான தீர்ப்பும் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
கடந்த 21.07.2009 ஆம் திகதி நான்கு பேர் இணைந்து வாய் பேச முடியாத பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, இந்த வழக்கில் 4 பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜுலை மாதம் 8 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த தாதியர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான விசாரணையும் எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவை நீடிப்பதா அல்லது இடைநிறுத்துவதா என்பது குறித்து நீதிபதி இளஞ்செழியன் அன்றைய தினம் கட்டளை பிறப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.