சேரன் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது உற்ற தோழரான சீமானின் பகிரங்க வேண்டுகோளையடுத்து இது நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன்.
எது எவ்வாறோ, சேரனிடம் மன்னிப்புக் கோருவதாலேயோ சேரன் மன்னிப்புக் கேட்பதாலேயோ நிகழப்போவது ஒன்றுமில்லை. ஆனால் சேரன் போன்றவர்கள் சில யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தமது அரசியல் மற்றும் சினிமா வியாபாரங்களைத் தொடரவேண்டும் என்ற ஒரு உண்மையை இது உணர்த்தியுள்ளது. கிள்ளியும் நுள்ளியும் மசித்தும் துவைத்தும் போக ஈழத் தமிழர் ஒன்றும் கிள்ளுக்கீரை இல்லையென்பதை இத்தால் உணரவேண்டும்.
ஒன்றாக நினைத்த சகோதரர்கள் விடும் தவறைச் சுட்டிக்காட்டியதற்காக எல்லோரும் என்மீது பாய்கிறார்கள். தலைவர் இல்லாத இழப்பு இப்போதுதான் புரிகிறது. அவர் இருந்திருந்தால் சேரன் நம்மாளு என்று சொல்லியிருப்பார் எனவும் சேரன் இந்த மன்னிப்புக் கடிதத்தில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆம் சேரன், இதே கூற்றை தமிழ்நாட்டிலிருந்து சோ ராமசாமியோ சுப்பிரமணியசுவாமியோ கூறியிருந்தால் நாம் அதை கணக்கிலும் எடுத்திருக்கமாட்டோம். உலகறிந்த ஈழத்தமிழ் விரோதிகளான அவர்கள்கூட இதுவரை இப்படியான ஒரு கருத்தை முன்வைத்ததில்லை. ஏன் கருணாநிதி சொல்லியிருந்தால்கூட கணக்கெடுத்திருக்கமாட்டோம், ஏனெனில் கல்லிலே கட்டி கடலிலே போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்ற விஞ்ஞானத்துக்கே சவால்விடும் உணர்ச்சிக் கோமாளி அவர்.
ஆனால் சொன்னது சேரனல்லவா? சேரன், உங்களை நாம் அப்படியா பார்த்தோம்? எங்களில் ஒருவனாக எங்கள் சகோதரனாகத்தானே நாங்களும் உங்களைப் பார்த்தோம். அதனால்தான் உங்கள் கருத்தை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. எங்களோடு இருந்துகொண்டே எங்களைச் சுட்டீர்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம், பலாபலனை அனுபவிக்கிறீர்கள் அவ்வளவுதான். அருவருப்பு என்ற வார்த்தை உங்கள் தமிழில் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அது ஈழத்துத் தனித்துவத் தமிழில் நாயிலும் கடைய இழிநிலைப் பொருளைக் குறிப்பதாகும். அதனாற்றான் எங்கள் தன்மானம் தலை நிமிர்ந்தது!
நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது மன்னிப்புக் கோரலை அல்ல, சில யதார்த்தங்களை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதையே. சகோதரனாக இருந்தாலும் தட்டிக் கேட்பதற்கென்று நெறிமுறை உண்டு. அதை மீறுகின்ற எவருமே எங்களைப் பொறுத்தவரை குற்றவாளிதான். ஏனெனில் சகோதரர்களாகப் பழகியவர்கள்தான் இங்கே துரோகிகளாக மாறியவர்கள். இது இன்று நேற்றல்ல இராவணன் தம்பி விபீடணன் காலத்திலிருந்து இங்கே கண்டுவரும் பட்டறிவு ஞானம். உங்கள் பேச்சு தவறு செய்தவர்களைத் திருத்துவதை விடுத்து எங்கள் ஆத்மார்த்தமான போராட்டத்தையும் இழப்பின் அவலங்களையும் சீண்டிவிட்டது.
நீங்கள் நேசிப்பதாகக் கூறும் அந்தத் தலைவர் வழிநடத்திய அமைப்பின் எழுச்சிப்பாடல் ஒன்றில்வரும் சில வரிகளை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்,
“நாடெலாம் சுடுகாடுகள் போலவே நாசங்களானதடா
நாங்கள் நம்பிக்கை வைத்தவர் யாவருமே
வெறும் வேசங்களானதடா இப்போ மோசங்களானதடா
எனினும் பாதைகள் வளையாது
எங்கள் பயணங்கள் முடியாது
போகுமிடத்தைச் சேரும்வரைக்கும் பாதைகள் வளையாது
எங்கள் பயணங்கள் முடியாது!”
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் வந்த இந்தப் பாடல் வரி இன்றுவரை அதே நிலைகளைத்தான் அடையாளங் காட்டி உணர்த்தி வருகிறது. இது உங்களைப் பொறுத்தவரை எவ்வாறு பொருந்துகின்றதென்பதை உணர்வீர்களென நம்புகிறோம்.
நன்றி Artist Shan