இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி வரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று நடந்தேறியது.
கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர். செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி குமாரசாமியும் ஒருவர். யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.
கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர். இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59 வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு டியூஷன் போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.
அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர். கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.
அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிர்ச்சியுட்டும் செய்தி அம்பலமானது. இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
கிருசாந்தி வன்கொலை, மூடுண்டிருந்த யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. இதனால் தொடர் யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. நெருக்கடியை தவிர்க்க சந்திரிக்கா அரசு ஒன்பதுபேரை கைது செய்தது. ஏழு இராணுவத்தையும் இரண்டு சிப்பாய்களையும் கைது செய்தனர். அரசு எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காகியது. 1988ஆம் ஆண்டு ஜீலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
‘”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் – 300ல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.”
அப்போதைய அரசு கிருசாந்தி வழக்குடன் இந்த விவகாரத்தை மூடிமறைக்க முற்பட்டது. ஆனால் உலகளவில் இந்த விவகாரம் அவதானிக்கப்பட்டது. செம்மணிப் புதைகுழியை தோண்ட வேண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. இதனையடுத்து இலங்கை அரசுக்கு புதைகுழி விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. செம்மணியில் வெளிவந்த எலும்புக்கூடுகள் சோமரத்தின ராஜபக்ச வாக்குமூலத்தை மெய்ப்பித்தது.
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர். யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது. செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன என்றும் அதில் பத்துப் புதைகுழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஐந்தை உதவி பொலீஸ் அதிகாரி பெரேராவால் காட்ட முடியும். எஞ்சிய ஒன்றை – அது ஒரு கோவில் அருகில் உள்ளது – டி.எம். ஜெயதிலக்காவால் (மரணதண்டனை பெற்ற இன்னொரு சிப்பாய்) அடையாளம் காட்ட முடியும் என்றும் ராஜபக்ச கூறினார்.
அத்துடன் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்று சிப்பாய் ராஜபக்ச கூறினார். கப்டன் லலித் ஹேவா, லெப்டினன் விஜயசிறிவர்த்தன, லெப்டினன் துடுகல, மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா முதலிய இராணுவ அதிகாரிகளது விபரங்களை பகிரங்கப்படுத்தினான். அத்துடன் தனது வாக்குமூலத்தில் பல்வேறு கொலைகளை ராஜபக்ச விபரித்திருந்தார். இதன்போது செல்வரத்தினம் என்ற அரச ஊழியரை இராணுவம் கைது செய்த பின்னர் அவரை தேடி வந்த மனைவிக்கு என்ன நடந்தது என்று கீழ்கண்டவாறு ராஜபக்ச விபரித்தார்.
‘ஒருநாள் ஒரு மண்வெட்டியை எடுத்துவருமாறு கப்டன் லலித் ஹேவா என்னிடம் கேட்டார். நான் அங்கு சென்றபோது ஆடையில்லாது நிர்வாண கோலத்தில் இருந்த பெண் ஒருவருடன் கப்டன் ஹேவா நின்றார். அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அந்த முகாமுக்கு முன்பு கொண்டு வரப்பட்டிருந்தனர். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை கற்பழித்தார். பின்னர் நான் கொண்டுவந்து கொடுத்த மண்வெட்டியினாலும் இன்னும் சில பொல்லுகளாலும் கப்டன் ஹேவா அந்தக் கணவர் மனைவி இருவரையும் தாக்கினார். இருவரும் இறந்து போனார்கள்.’
கிரிசாந்தி கொலையும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் செம்மணிப் புதைகுழிகளும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்பு சார்ந்த கொடூர முகங்களை உலகிற்கு அம்பலப்படுத்தின. யாழ்ப்பாண மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறி யுத்தம் செய்த சந்திரிக்கா அரசாங்கம் எதற்காக யுத்தத்தை மேற்கொண்டது என்பதையும் செம்மணிப் புதைகுழிகள் அம்பலமாக்கின. குற்றவாளிகள் இனம் காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டபோதும் இலங்கை அரசினதும் இராணுவப்படைகளினதும் தமிழ் இன அழிப்பு செம்மணியுடன் முடிந்துவிடவில்லை. அவை முள்ளிவாய்க்கால் வரை உச்சம் கண்டன.
செம்மணி வெளி ஒரு இனம் சந்தித்த மிகப் பெரிய இன அழிப்பின் சுவடு. ஒரு இன அழிப்புச் செயல் உலகின் எதிர்காலத்தின் மனித உரிமை, இன உரிமை குறித்த விழிப்புக்கும் சிந்தனைக்கும் உரிய அனுபவம். அதை நினைவுகூர்வதே மனித மாண்பும் மனிதகுலத்தை பாதுகாக்கும் செயலுமாகும்.
ஆனால் செம்மணி விவகாரத்தில் கால ஓட்டத்தில் அதனை மறக்கும் விதமாகவே நடாத்தப்பட்டன. 600க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட செம்மணி வெளியில் நிறைந்துள்ள பல்தேசிய கம்பனிகளின் விளம்பரங்கள் எதன் வெளிப்பாடு? ஒரு அரசின் இனப்படுகொலையிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள செம்மணிப்படுகொலை சிறந்த உதாரணம். தமிழின அழிப்பு வரலாற்றில் செம்மணியை மறக்காமல் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூர கிருசாந்தி கொல்லப்பட்ட இந்த நாளே மிகவும் பொருத்தமானது.
குளோபல் தமிழ்