விடுதலைப்புலிகள் கார்த்திகை மாதத்தில் மாவீர்ர் விழா எடுப்பார்கள். சிங்களவர்களும் அதனைத்தொடங்கி விட்டார்களோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்த பாடல் இது. சென்ற வருடம் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவியாகச் செயற்பட்ட தமிழினி ஜெயக்குமாரன் பற்றிய பாடலிது. சிங்களத்திலும், தமிழிலும் வெளியாகியுள்ள இப்பாடலை எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்ட அனைவரும் சிங்களவர்களே.
பாடல் வரிகளை எழுதியவர்: காஷ்யப்ப சத்யபீரிஸ்
இசை அமைத்தவர்: மஹிந்த குமார்
பாடியவர்: உரேசா ரவிகான் (Uresha Ravihari)
பாடல் கூற வந்த கருத்தினை மிகவும் நெஞ்சைத்தொடும் வகையில் கூறுகின்றது. இசை, குரல், வரிகள் எல்லாம் நெஞ்சை அதிர வைக்கின்றன.
“முகமறியாப் பல சோதரர்கள்
முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளே
பெண்மையுள்ளம் கொண்ட சோதரிகள்
இருளில் பயத்துடன் நின்றனரே” என்னும் வரிகள் அக்காட்சியைக் கேட்பவர் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் தன்மை மிக்கவை.
‘ஆயுதம் தாங்கிப் பூமியை அழிய வைத்த, அதிரடித்த தமிழினி பின்னர் நெஞ்சம் துடித்து, தவித்து, ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்’ என்னும் அர்த்தத்தில் அமைந்துள்ள பாடல் முல்லைத்தீவுக்கடலில் முடிந்த யுத்தத்தில் மக்கள் அடைந்த துயரையும் வெளிப்படுத்துகின்றது. அம்மக்கள்
“முல்லைத்தீவின் கடற்கரையிலே
கதறிச் சாபம் இடுவாரோ?
கதறிச் சாபம் இடுவாரோ?:
என்று அத்துயரை எடுத்தியம்புகின்றது.
முன்பெல்லாம் சிங்களப்பாடகிகள் தமிழில் பாடும்பொழுது சிங்களத்தமிழில் பாடுவார்கள். உதாரணம் – சுஜாதா அத்தனாயக்க. ஆனால் உரேசா ரவிகானின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழினி பற்றிய குறிப்பில் தமிழினி என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
முழுப்பாடல் வரிகளும் கீழே:
நான் தமிழினி! ஆயுதம் ஏந்தியவள்!
நான் தமிழினி ஆயுதம் ஏந்தியவள்
பூமி அழியவே அதிரடித்தவள்
நெஞ்சம் துடித்தவள் நித்தம் தவித்தவள்
ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்
நெஞ்சம் துடித்தவள் நித்தம் தவித்தவள்
ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்
முகமறியாப் பல சோதரர்கள்
முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளே
பெண்மையுள்ளம் கொண்ட சோதரிகள்
இருளில் பயத்துடன் நின்றனரே
முல்லைத்தீவின் கடற்கரையிலே
கதறிச் சாபம் இடுவாரோ?
கதறிச் சாபம் இடுவாரோ?
சமாதான வெண்புறாக்கள்
கப்பலில் நிறைத்துக்கொண்டே
பொன்னும் வைரமும் தந்ததுவோ
சுதந்திரம் மலர்ந்திடவே
வெள்ளை ஆடைகள் அணிந்தே
குண்டுகள் துப்பாக்கிகள் கொண்டு வந்தாரே
நான் தமிழினி ஆயுதம் ஏந்தியவள்
ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்
நான் தமிழினி ஆயுதம் ஏந்தியவள்
பூமி அழியவே அதிரடித்தவள்
நெஞ்சம் துடித்தவள். நித்தம் தவித்தவள்
ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்
நெஞ்சம் துடித்தவள். நித்தம் தவித்தவள்
ஆயுதம் கை விட்டே தீர்வைத்தேடியவள்