யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் ஐவரையும் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார். யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த இரு மாணவர்கள் கடந்த 20ம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்து இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டு கடந்த 22ம் திகதி மன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
அநிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து ஐந்து சந்தேகநபர்களும் இன்று காலை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு மன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கு தொடர்பான சான்று பொருட்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அதுவரையில் குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார். இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்ததனை அடுத்து யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழ பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தன.
குளோபல் தமிழ்