இந்தோனேசியாவை உலுக்கும் இயற்கை அனர்த்தம்: எரிமலை வெடித்தது!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில், தற்போது அங்கு எரிமலை வெடித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சுலவெசி தீவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள சொபுடன் எரிமலையே இவ்வாறு வெடித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
எரிமலையிலிருந்து வெளியான புகை 6000 மீற்றர் உயரத்திற்குச் சென்றுள்ளதால், அப்பகுதியூடான விமான பயணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை பாதிப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படாத போதிலும், குறித்த பகுதியிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் மக்களை இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொபுடன் எரிமலை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் குமுறிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது பாரியளவில் புகையை கக்கிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுலவெசி தீவை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இதுவரை 1,407 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்கு இடையில் எரிமலை வெடித்துள்ளமையானது, அந்நாட்டு மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.