இந்தோனேசிய பேரனர்த்தம்: உயிரிழப்பு 1,407ஆக அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,407ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தின் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்றும் (புதன்கிழமை) பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீட்புப் படையினர், உயிரிழப்புகள் 1,407ஆக அதிகரித்துள்ளதென அறிவித்துள்ளனர்.
சுலவெசி மாகாணத்திலுள்ள பெடோபோ பகுதியில் மாத்திரம் சுமார் 1700 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
குறித்த பகுதி முற்றாக அழிந்து மண் கரைந்து திரவத்தைப் போல காணப்படுகின்ற நிலையில், அப்பகுதியில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இராட்சத இயந்திரங்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள காணொளியொன்றில், கொங்கிறீட் தூண்களுக்கு இடையிலிருந்து சடலங்கள் கண்டெடுக்கப்படுவது புலனாகின்றது.
இந்த அனர்த்தத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் இவ்வருடம் ஏற்பட்ட மிகப்பெரிய அனர்த்தமாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு உதவிகளும் கோரப்பட்டுள்ளன.