இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் இன்றும் தேடுதல்!
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் உயிரிழந்தவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
குறித்த அனர்த்தத்தால் நூற்றிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் இன்றும் (வியாழக்கிழமை) தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சுலவெசி தீவில் காணப்பட்ட 8 மாடிக் கட்டடத்தில் 50 பேர் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்டடம் தரைமட்டமாகியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிரமத்தின் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கட்டட இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கலாமென எதிர்பார்க்கும் மீட்புக்குழுவினர், ஒலியை கண்டறியும் கருவிகளை பயன்படுத்தி மீட்புப் பணிகளை தொடர்கின்றனர்.
சுலவெசி தீவில் கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது.
இதில் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுலவெசி தீவின் பிரதான நகரான பலுவிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், 2500இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவு, நீர், தங்குமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சுலவெசி தீவுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. பாலங்கள், வீதிகள் போன்றவை சேதமடைந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விமானங்கள் ஊடாக உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை அனுப்பவும், மக்களை பாதுகாப்பாக மீட்கவும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.