சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பணிக்கின்றேன்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய இந்தியா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், 95 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இப்போட்டியின் ஊடாக இந்திய அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த இளம் வீரரான பிரித்வி ஷா, ஒருநாள் போட்டிகளை போன்று 99 பந்துகளில் சதமடித்து அசத்தினார். பின்னர் 134 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இந்த சதத்தின் மூலம், குறைந்த வயதில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் பிரித்வி ஷா இரண்டாம் இடம் பிடித்தார்.
இவருக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் சதமடித்து முதலிடம் பிடித்துள்ளார். அவர் 17 ஆண்டுகள் 107 நாட்கள் ஆன நிலையில் டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.
தற்போது 18 ஆண்டுகள் 329 நாட்கள் ஆன நிலையில், பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.
மேலும், குறைந்த பந்துகளில் சதமடித்த மூன்றாவது வீரர் என்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் 85 பந்துகளிலும், டுவைன் ஸ்மித் 93 பந்துகளிலும் சதமடித்து உள்ளனர்.
தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்தது குறித்து பிரித்வி ஷா கூறுகையில், “என்னைப் பொருத்தவரை எனக்கு இது அறிமுகப்போட்டியாகத் தெரியவில்லை. இங்கிலாந்து தொடருக்கே நான் களம் காண தயாராக இருந்தேன். ஆனால் வாய்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது. முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடியதால் தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளானேன். ஆனால் 10-15 ஓவர்களுக்கு பிறகு இயல்பாக விளையாடத் தொடங்கினேன். கணிசமான பவுண்டரிகளும் அடித்தேன். முடிந்த வரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டேன். இந்த சதம் எனக்கு போதுமானது அல்ல. ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இன்னும் கூடுதல் நேரம் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். தேனீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிக்கிறது.
சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். எனக்காக அவர் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு எல்லா வகையிலும் அவர் பக்கபலமாக இருக்கிறார். அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன். இன்று களமிறங்கும்போது கூட, ரிலாக்ஸாக விளையாடு, கிரிக்கெட்டை ரசித்து விளையாடு என உற்சாகப்படுத்தினார்.
19வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் ஆகியவற்றை ஒப்பிடும் போது ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. அதிகமான உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியதால், எனக்கு வேகப்பந்துவீச்சின் நுணுக்கங்கள், வகைகளை அறிய முடிந்தது
மூத்த வீரர்களின் அனுபவத்தை ஓய்வறையில் பகிர்ந்து கொள்வது சிறப்பான விடயமாகும். புதுமுக வீரரான நான், ஓய்வறையில் சௌகரியமாக இருக்கும் வகையில் சிரேஷ்ட வீரர்கள் என்னை வழிநடத்துகிறார்கள். அணித்தலைவர் கோஹ்லியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், ‘சீனியர்-ஜூனியர் பாகுபாடு இங்கு கிடையாது. நீ இந்திய அணிக்காக விளையாடுகிறாய் என்றால் மற்றவர்களும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள்’ என்று எப்போதும் சொல்வார்கள். அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்ததோடு, நெருக்கடி இல்லாமலும் பார்த்துக் கொண்டனர். இப்போது எல்லா வீரர்களும் எனக்கு நண்பர்கள் ஆகி விட்டனர்” என கூறினார்.
இந்நிலையில், அறிமுக டெஸ்டில் சதமடித்து அசத்திய பிரித்வி ஷாவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.