பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மினி பேருந்தொன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரமதான் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த மினி பேருந்து, இன்று (சனிக்கிழமை) ஜோர்ஜ் பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
பாதையின் வளைவில் பேருந்து திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்தற்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்புப் பணிகள் இடம்பெறுவதோடு, பயணிகளை மீட்பதற்கு போராடி வருகின்றனர்.
பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில், 18 பேரின் உடல்கள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி SAIF-UD-DIN KHAN தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான வீதிகளை இந்தியாவே கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரமற்ற மூலப்பொருட்களால் அமையப்பெறும் நிர்மாணங்கள் மற்றும் அதிக வாகன நெரிசல் காரணமாகவே விபத்துக்கள் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
வீதி விபத்துகளினால் மாத்திரம் வருடமொன்றிற்கு 100,000இற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக இந்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.