போராட செல்லாவிட்டால் நான் இன்று ஒரு மருத்துவர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை எனவும் அவர் போரையே விரும்பியதாகவும் அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்பு தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி – நீங்கள் தெற்கை சேர்ந்தவரா..
கருணா – இல்லை நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். எனினும் எனது பாட்டனார் தெற்கை சேர்ந்த மீனவர். அவரது பெயர் நினைவில்லை. எனது தந்தை பிறந்த ஊர் மட்டக்களப்பு கிரான். நானும் அங்குதான் பிறந்தேன். எனது தந்தையின் பெயர் விநாயகமூர்த்தி. அனைவரும் அவரை போடியார் என்றே அழைப்பார்கள். அவருக்கு காணிகள் இருந்தன. எனது குடும்பத்தில் சகோதர சகோதரிகள் 7 பேர். நான் இளையவன்.
எங்கள் குடும்பத்தில் 5 பேர் பாடசாலை அதிபர்கள். எனக்கு அழகான சிறுபாராயமும் இருந்தது. பாடசாலை விடுமுறையில் வாரம் தோறும் நான் வீட்டுக்கு வருவேன். வீட்டுக்கு வந்த பின்னர் தந்தையுடன் வயல்கள், காடுகளில் கூடவே செல்வேன். அந்த வாழ்க்கை மிகவும் அழகானது.
முதலில் நான் கிரான் மகா வித்தியாலயத்தில் படித்தேன். அதன் பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்தேன். சிறு வயதில் நான் படிப்பதை அதிகமாக விரும்பினேன். நான் நன்றாக படிப்பேன். உயர் தரத்தில் நான் உயிரியல் விஞ்ஞானம் படித்தேன். பல்கலைக்கழகத்திற்கு சென்று மருத்துவராக வேண்டும் என்பது எனது விருப்பம்.
கேள்வி – மருத்துவராக வர வேண்டும் என்று விரும்பிய உங்களின் பயணம் எப்படி மாறியது?
கருணா – 1983 ஆம் ஆண்டு தமிழ், சிங்கள கலவரத்துடன் எனது கனவு கலைந்து போனது. தமிழ், சிங்கள கலவரம் நடந்த நேரத்தில் எங்கள் வீட்டில் பெரிய பாத்திரங்களில் உணவு சமைப்போம். கொழும்பில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் மிகவும் துயரமாக கதைப்பார்கள். ஏன் இப்படி நடக்கின்றது என்று நான் என் தந்தையிடம் கேட்டேன். கொழும்பில் கலவரம் என்று என் தந்தை சொன்னார். வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களில் சிலரது உறவினர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.
வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களும் தமக்கு நடந்த துயரங்களை கூறினர். அப்போது மக்கள் மத்தியில் இனவாதம் தூண்டப்பட்டிருந்தது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற அமைப்பு அப்போது இருக்கவில்லை.
சிங்கள மக்கள் பற்றி தவறான புரிதல் எமது மக்களுக்குள் காணப்பட்டது. பல இளைஞர்கள் அமைப்புகளில் இணைந்தனர்.
புத்தகங்களை ஒரு பக்கம் வீசி விட்டு இயக்கத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் வீட்டுக்கு தெரியாமல் இயக்கத்தில் சேர்ந்தேன். இயக்கத்தில் சேர்ந்த பின்னர் 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் பயிற்சிக்காக 300 பேரை இந்தியாவுக்கு அனுப்பினர்கள். அந்த 300 பேரில் நானும் இருந்தேன். எமக்கு ஆறு மாதம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சிகள் முடிந்த பின்னர் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தார். அவர் வந்து எங்களை சந்தித்தார். அவர் என்னை தனது மெய்பாதுகாவலராக தெரிவு செய்தார். பின்னர் அம்பாறை, மட்டக்களப்பின் பொறுப்பை எனக்கு வழங்கினார்.
கேள்வி – எதற்காக போரிட்டீர்கள்?
கருணா – தனிநாட்டுக்காக விடுதலைப் புலிகள் போராடினர். தனிநாட்டுக்கான இந்த போராட்டத்தில் நான் இராணுவத்தினருடன் மட்டுமே போரிட்டேன். ஆரம்ப காலத்தில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. உரிமைகளுக்காகவே நாங்கள் போராடினோம்.
இந்தியா, இதற்கு ஆரம்பத்தில் இருந்தே உதவியது. இதனால், போராட்டத்தில் நாங்கள் சீக்கிரமாக வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நினைத்தோம். எனினும் பிற்காலத்தில் அரசாங்கமும், புலிகள் அமைப்பு சிவில் போரில் ஈடுபட்டன.
கேள்வி – உரிமைகளை வென்றெடுக்க போராடியது என்றால், புலிகள் அமைப்பு ஏன் பொதுமக்களை கொலை செய்தது?
கருணா – வடக்கு கிழக்கில் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்கு அனுப்புவார்கள் என்று எண்ணியே புலிகள் தென் பகுதிகளில் குண்டு தாக்குதல்களை நடத்தினர். எனினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த நேரத்தில் பிரபாகரன், கடற்புலிகள், தற்கொலைப்படை, கரும்புலிகள் போன்றவற்றை உருவாக்கியிருந்தார்.
இந்த படைகளில் இணைந்து கொண்டவர்கள் தமது இனத்திற்காக இணைந்தனர். எவரும் பணம் கேட்கவில்லை. இயக்கத்தில் இருந்தவர் திருமணம் செய்த பின்னர் அவர்களின் குடும்பங்களை இயக்கமே பராமரித்தது.
இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு உணவு உட்பட அனைத்தும் கொடுக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து இயக்கத்திற்கு பணம் கிடைத்தது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் அனுப்பினர். அந்த பணத்திலேயே இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது.
கேள்வி – உரிமைகளுக்காக போராடிய போதிலும் மக்களை கொலை செய்யும் போது உங்களுக்கு என்ன தோன்றியது?.
கருணா – பொதுமக்களை கொலை செய்வது தொடர்பில் இயக்கத்தில் இருந்த சில தலைவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தன. இந்த போராட்டத்தின் போது வடக்கை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு சென்று போருக்கான பணத்தை அனுப்பினர்.
எனினும் கிழக்கு மாகாணத்தவர்களே போரில் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டனர். இரண்டு பக்கத்திலும் கொல்லப்படும் போது வெறுப்பு ஏற்பட்டது. அவ்வப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் போது நிலைமை சரியாகும் என எனக்கு தோன்றியது. எனினும் சமாதான பேச்சுவார்த்தை காலங்களில் புலிகள் ஆயுத ரீதியில் பலமடைந்தனர்.
ஒரு முறை ஆனையிறவு தாக்குதலில் அரசாங்கம் பின்னடைந்தது. இந்த போரை நிறுத்த அவ்வப்போது முன்னாள் ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
எனினும் அவை வெற்றியளிக்கவில்லை. அரசியல் தீர்வொன்று நாம் செல்வோம் என நான் பிரபாகரனிடம் கூறினேன். எனினும் அவருக்கு அதனை புரிந்துக்கொள்ள முடியவில்லை.
இரண்டு பக்கமும் மக்கள் கொல்லப்படும் போது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாம் ஒரே நாட்டு மக்கள் இதற்கு தீர்வு வேண்டும் என நான் எண்ணினேன். அப்போது அன்டன் பாலசிங்கமும் அதனை கூறியிருந்தார்.
நான் அசோக மன்னன் பற்றி புத்தகங்களில் படித்திருக்கின்றேன். போரில் ஈடுபட்டு அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. சமாதானத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்றுக் கூறி கையெழுத்திடுவோம் என்று நான் அன்டன் பாலசிங்கத்திடம் கூறினேன். அவர் இதனை பிரபாகரனிடம் கூறினாலும் அவர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை.
சமாதான பேச்சுக்களில் பிரபாகரன் கலந்துக்கொள்ளவில்லை. போரில் ஈடுபட வேண்டும் என்ற தேவையே அவருக்கு இருந்தது. இந்த விடயத்தில் பொட்டம்மான் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விடாப்பிடியாக நின்றனர்.
சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு விட்டு, நோர்வேயில் இருந்து அன்டன் பாலசிங்கம் புறப்பட்டுச் சென்றார். நான் இலங்கை திரும்பினேன். இவற்றுக்கு நான் தான் காரணம் என ருத்திரகுமாரன், பிரபாகரனிடம் ஏற்கனவே கூறிவிட்டார்.
அப்போதில் இருந்து பிரபாகரன் என்னுடன் கோபித்து கொண்டார். பிரபாகரன் என்னை கொலை செய்ய திட்டமிட்டார். மாத்தையாவை கொலை செய்தது போல் என்னையும் கொலை செய்வார்கள் என்று நினைத்தேன்.
கேள்வி – நீங்கள் இயக்கத்தில் இருந்து விலகினீர்களா?.
கருணா – இல்லை. எனது அணியில் 4 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களை நான் விடுவித்தேன். அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கூறினேன். அவர்களும் விருப்பத்தின் பேரில் சென்றனர். நான் தொப்பிகல காட்டில் ஒழிந்திருந்து, பின்னர் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்றேன்.
அப்போது நான் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டேன். போருக்கு அரசியல் தீர்வை பெற உதவ வேண்டும் என நினைத்தேன். எனது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி வையுங்கள் என்ற கோரிக்கை மட்டுமே நான் முன்வைத்தேன்.
கேள்வி – விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் காதலிக்கவும் திருமணம் செய்யவும் சந்தர்ப்பம் இருந்ததா?.
கருணா – அது இப்படித்தான். திருமணம் செய்து கொள்ளலாம். எனினும் தேவையற்ற பிணைப்புகள் வைத்துக்கொள்ள முடியாது. இரண்டு பேர் காதலித்தால், அவர்கள் அதனை பிரபாகரனுக்கு அறிவித்து திருமணம் செய்துக்கொள்ள முடியும்.
நான் வித்தியாவை காதலித்தேன். அவர் திறமையான விளையாட்டு வீராங்கனை. அவளும் இயக்கத்தில் இருந்தாள். அவள் செயற்பாட்டு ரீதியான உறுப்பினர். அவளது இயக்க பெயர் நீரா. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்ட தினத்தில் எங்களது திருமணம் நடந்தது. அது 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி. பிரபாகரனின் ஆசியுடன் நான் திருமணம் செய்துகொண்டேன்.
எனினும் எனது பிள்ளைகள் மற்றும் மனைவியை பிரிந்து வாழ நேர்ந்தது. அது எனது மனதுக்கு கவலையை ஏற்படுத்தியது.
கேள்வி – பிரபாகரன் இறந்த பின்னர், அவரது சடலத்தை பார்த்த உங்களுக்கு என்ன தோன்றியது?.
கருணா – அப்போது அவர் குறித்து எனக்கு முக்கியமாக எதனையும் நினைக்கவில்லை. எங்களுக்கு கோபம் ஏற்படும் முன்னர் நானே அவரது நம்பிக்கைக்குரியவனாக இருந்தேன்.
எனது அண்ணனும் இயக்கத்தில் இருந்தார். பிரபாகரன் அவரையும் கொலை செய்தார். நான் கூறியதை கேட்டு அரசியல் தீர்வுக்கு வந்திருந்தால், இப்படி எதுவும் நடந்திருக்காது என்று தோன்றியது.
கேள்வி – அரசியலுக்கு வந்த பின்னர் உங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா?
கருணா – ஆம் தெளிவான மாற்றம் ஏற்பட்டது. நான் நாட்டுக்கு சேவையை செய்தேன் என நினைக்கின்றேன். அரசியலுக்கு வந்த பின்னர் சிங்கள மக்கள் யார் என்பதை புரிந்துகொண்டேன். எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. எனது அமைச்சின் ஊடாக எந்த பேதங்களுக்கு இல்லாமல் மக்களுக்கு உதவி செய்தேன்.
எனது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றுமாறு அப்போதே நான் சாந்தி பெரேராவுக்கு அழைப்பு விடுத்தேன். அவர் வந்தார். அவர் வந்த பயணம் சவாலானது என நான் நினைக்கின்றேன்.
கேள்வி – சம்பாதிப்பதற்காகவா அரசியலில் இணைந்தீர்கள்?.
கருணா – இல்லை. அரசியலில் நான் எதனையும் சம்பாதிக்கவில்லை. எனது தந்தையின் சொத்துக்கள், காணிகள் மூலமே வாழ்ந்து வருகிறேன். ஆட்களை கொண்டு நெற் பயிரிடுகிறேன். விவசாயத்தில் ஈடுபடுகிறேன். எனக்கு மட்டக்களப்பில் ஹோட்டல்களோ, மதுபான நிலையங்களோ இல்லை. சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
கேள்வி – நீங்கள் என்ன கூறினாலும் தெற்கில் உள்ள மக்கள் உங்கள் மீது கோபத்தில் உள்ளனர். கண்டி தலதா மாளிகை மீதான தாக்குதல், ஜயசிறி மஹாபோதி தாக்குதல் என்பது மக்களை கவலையடைய செய்தது. 100க்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சுங்காவெலி போன்ற இடங்களில் கருணா வந்து தமது உறவினர்களை கொன்றதாக மக்கள் கூறுகின்றனர். வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தி, மக்களை கொன்று கிடைத்த நாடு என்ன?
கருணா – பௌத்த வழிபாட்டு தலங்களை தாக்கும் தேவை எனக்கு இருக்கவில்லை. பொதுமக்களை கொல்லும் தேவையும் இருக்கவில்லை. அனைத்து மிலேச்சத்தனங்களை பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களுமே செய்தனர். எனினும் இவற்றை நானும் எனது தரப்பினருமே செய்தனர் என பரப்பினர்.
கேள்வி – தற்போது நீங்கள் எப்படி வாழ்க்கை செலவிட்டு வருகிறீர்கள்?
கருணா – 10 ஆண்டுகளுக்கு பின்னர் எனது மனைவி, பிள்ளைகள் இலங்கை வந்தனர். இரண்டு மகளும் மருத்துவர்கள். மனைவி பொறியியலாளர். நான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இசையை ரசிப்பது எனக்கு பிடிக்கும். இந்த நகரம் உங்களது என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது இளமை காலம் இயக்கத்தில் சிக்கியிருந்தது. வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கவில்லை. இயக்கத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. 40 வயது வரை நான் மதுபானம் அருந்தியதில்லை.
நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னரே மது அருந்த பழகிக்கொண்டேன். மிகவும் சுதந்திரமாக இருக்க நான் விரும்புகிறேன். கிராமத்தில் போல் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் எனது மனத்தில் ஒரு தயக்கம் இருந்தது.
மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற தயக்கம் காணப்பட்டது. எனினும் எனது தனிப்பட்ட செயலாளர் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறைப்பட்டு போயிருந்த வாழ்க்கையில் இருந்து நான் மீள உதவி செய்தார்கள்.
இசை நிகழ்ச்சிகளை பார்க்க அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். கலையை ரசிக்க பழக்கப்படுத்தினர்.
நான் நிறையவே மாறிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சிறுப்பிள்ளைகளுடன் நாளை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இயற்கை சூழலுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
கேள்வி – உங்களது குடும்பத்தினர் எப்படி இருக்கின்றனர்?
மனைவி மற்றும் பிள்ளைகள் ஒரு நாள் இலங்கையில் குடியேற வருவார்கள். அவர்கள் வரும் வரை நான் இப்படியே இருப்பேன். எனது சகோதர, சகோதரிகள் சிறப்பாக உள்ளனர்.
தாயும் தந்தையும் உயிருடன் இல்லை. என்னை பற்றி என் தாய் தினமும் கவலைப்பட்டிருப்பார் என நினைக்கின்றேன். இயக்கத்தில் சேர்ந்த பின்னர் வீட்டுக்கு வர கிடைக்கவில்லை. நான் தொப்பிகலையில் இருக்கும் போது அம்மா மற்றும் குடும்பத்தினர் வந்து என்னை பார்த்து விட்டு செல்வார்கள்.
கேள்வி – போர் பற்றி தற்போது என்ன நினைக்கின்றீர்கள்.?
கருணா – போர் என்பது மிகவும் கொடுமையானது. தற்போது நாட்டு மக்கள் ஐக்கியமாக வாழ்கின்றனர். யார் தற்போது போரை ஆரம்பித்தாலும் தமிழ் மக்களே அதனை விரும்ப மாட்டார்கள் என நம்புகிறேன்.
போருக்கு ஆதரவு வழங்கவும் போருக்காகவும் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே கோஷமிட்டு வருகின்றனர்.
பிரபாகரன் யாதார்த்தை உணர்ந்திருப்பார் என்றால் நாட்டில் போர் முடிந்து பல காலங்கள் ஆகியிருக்கும். எது எப்படி இருந்தாலும் தற்போதுள்ள நல்லிணக்கம் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.