மக்களின் பணம் எமக்கு வேண்டாம்!
மக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எமது மக்களுக்குத் தேவையான அபிவிருத்தியை மேற்கொள்ள நாம் உண்மையாகவே செயற்பட்டுவருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
நுவரெலியா, கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்திலும், நோனா தோட்டம் மேல் பிரிவிலும் அமைக்கப்பட்ட 40 வீடுகள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சிலர் நாம் செய்யும் வேலைகளை குறைசொல்லிக்கொண்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். இவர்களால் எமது மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது. எமது சமூகமே இன்று தலைகுனிந்து நிற்கின்றது.
இதேபோன்று என்னிடத்தில் யாரும் உழல் செய்ய நினைத்தால் அவர்களை முதலில் பிடித்துக்கொடுப்பது நானாகவே இருப்பேன்.
எனவே மக்கள் பணத்தை மக்களின் அபிவிருத்திக்கு சரியாகப் பயன்படுத்தி வீட்டுத்திட்டம், காணி உரிமை, மலையகத்துக்கான அதிகாரசபை போன்றவற்றை நான் எற்படுத்திக் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.