இலங்கையை தீவிரமாக கண்காணிக்கும் மூன்று நாடுகள்!
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு ஈடாக இராணுவ கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திறனைக் கொண்டுள்ளதாக ஜப்பானிய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிஹொன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் பாதுகாப்பு ஆலோசகருமான நொமோசு யொஸிடொமி இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அமெரிக்காவின் ஸ்டெம்போட் எட்வகேட் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.
அதில் சீனாவின் இராணுவ ஆதிக்கத்துக்கு ஈடாக ஜப்பான் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையில் தமது கண்காணிப்பை செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடக்காலப்பகுதியில் 50 தடவைகளாக இலங்கை வரவிருந்த ஜப்பானிய கப்பல்கள் உரிய பயணங்களை மேற்கொண்டிருக்கவில்லை இதற்கு சீனாவின் ஆதிக்கமே காரணமாகும்.
எனினும் தற்போது ஜப்பானிய கப்பல்கள் இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இதன்போது இலங்கையுடன் கடற்படை உறவை விருத்திச்செய்துக்கொள்ளும் நடவடிக்கையிலும் ஜப்பான் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க நாளிதழ் கூறுகிறது.
இந்தநிலையில் சீனாவுக்கு எதிராக இந்தியா ஜப்பான், அமரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையில் தமது இராணுவ கட்டமைப்பில் கவனம் செலுத்துவதாக ஜப்பானிய அமைச்சரவைக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இந்தியாவும் சீனாவின் இலங்கை ஆதிக்கம் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.