யாழ். பல்கலைக்கழக மாணவர்களை தாக்க முற்பட்ட தென்னிலங்கை இளைஞர்கள்!
சிறையில் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை, இங்கே இருப்பவர்கள் விடுதலைப்புலிகள் என சிங்கள இளைஞர்கள் சிலர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் நேற்றைய தினம் அநுராதபுர சிறைச்சாலையை சென்றடைந்தது.
சிறைக்கு சென்ற மாணவர்கள் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு முன்பாக கூடியிருந்தவேளை, இவ்வாறு பெரும்பான்மை இன இளைஞர்களால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை முன்பாக பெருமளவான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்கள் மாணவர்களுடன் இனவாத கருத்துக்களை தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தின்போது அருகில் இருந்த பொலிஸார் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அனைவராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.