காணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது!

காணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது!

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியால் எழுதப்பட்ட இறுதிக் கட்டுரை அவர் காணாமல்போய் இரண்டு வாரங்களின் பின்னர் வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தினுள் நுழைந்த ஜமால் கஷோக்கி அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.

அரேபிய உலகில் ஊடக சுதந்திரம் இல்லாதது குறித்து தெளிவாக விவரிக்கும் உணர்ச்சிகரமான இக்கட்டுரை தற்போது ஜமால் கஷோக்கியின் உதவியாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜமால் கஷோக்கி திரும்பிவிடுவார் எனும் நம்பிக்கையில் புதன்கிழமை இரவுவரை இந்தக்கட்டுரை வெளியீட்டை தாமதப்படுத்தியதாக வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையின் உலகளாவிய கருத்து ஆசிரியரான Karen Attiah தெரிவித்தார்.

தற்போது அது நடக்காது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், தாம் திருத்தவேண்டிய ஜமால் கஷோக்கியின் கடைசிக்கட்டுரை இது என்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக்கட்டுரை அரேபிய உலகில் ஊடக சுதந்திரம் குறித்த ஜமால் கஷோக்கியின் உறுதிப்பாடு மற்றும் பேரார்வத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது எனவும் இந்த சுதந்திரத்துக்காக அவர் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் எனவும் Karen Attiah தெரிவித்தார்.

அரேபிய உலகிற்கு அதிகளவில் தேவைப்படும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என தலைப்பிடப்பட்ட இக்கட்டுரையானது, அரேபிய உலகில் துனிசியா மாத்திரமே சுதந்திரமான நாடு என வகைப்படுத்தக்கூடிய ஒரே நாடு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஏனைய அரேபிய நாடுகளில் உள்ள மக்கள் அறியாமை காரணமாகவோ அல்லது தவறான புரிதல் காரணமாகவோ அவர்களது நாளாந்த வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் போராடுவதாக இக்கட்டுரையில் ஜமால் கஷோக்கி எழுதியுள்ளார்.

அத்தோடு பெரும்பாலான மக்கள் அரேபிய அரசாங்கங்களின் பொய்யான தகவல்களை முழுமையாக நம்பி ஏமாறுகிறார்கள் எனவும் துரதிருஷ்டவசமாக, இந்த நிலைமை மாற்றமுடியாதது எனவும் அவர் இக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் இல்லாதிருப்பது எவ்வளவு வேதனையானது என்பதை உலகுக்கு காட்ட தமக்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், தனது சிறந்த நண்பரான சவுதி எழுத்தாளர் சாலே அல் ஷிஹி சவுதி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருவதாகவும் இக்கட்டுரையில் ஜமால் கஷோக்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரேபிய மொழியில் தனது கட்டுரைகளை வெளியிடுவதற்கு வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இதனால் அரேபியர்கள் அமெரிக்காவிலும் மேற்குலகிலும் ஜனநாயகத்தின் சிக்கல்களையும் மற்றும் அவர்களின் சொந்த சமூகத்தில் உள்ள தாக்கங்களையும் இலகுவாகப் புரிந்துகொள்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

இக்கட்டுரையின் இறுதி பந்தியில் அரேபிய தேசியவாத அரசாங்கங்களின் செல்வாக்கிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சுயாதீனமான சர்வதேச அரபு குரல்களுக்கான அரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதை ஜமால் கஷோக்கி உறுதியாகக் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net