முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி காலமானார்!
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி (92) இன்று (வியாழக்கிழமை) உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் தனது பிறந்தநாளான அக்டோபர் 18 ஆம் திகதியிலேயே காலமாகியுள்ளார்.
என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
என்.டி.திவாரி உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.திவாரி ஆந்திர மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவாரி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இறப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், “என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூரப்படுவார். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.